விவசாயிகளின் சத்தியத்துக்கான போராட்டத்தை உலகில் எந்த அரசாங்கத்தாலும் தடுக்க முடியாது என காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் டெல்லி சலோ போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் நேற்று (நவ.26) தொடங்கிய நிலையில், பஞ்சாப் விவசாயிகள் டிராக்டர் வாகனங்களில் வந்து திரளாகக் கலந்துகொண்டனர்.

அப்போது, விவசாயிகளின் குழுவைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் போலீஸார் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். விவசாயிகள் மீது தடியடிப் பிரயோகமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தது. சோனிப்பேட் பகுதியில் குழுமி இருந்த விவசாயிகள் மீது தண்ணீர் பீரங்கிகள் மூலம் நீர் பாய்ச்சப்பட்டது.

எனினும், டெல்லிக்குச் செல்வதில் விவசாயிகள் உறுதியாக இருந்தனர். இந்நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்குக் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என டெல்லி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ''சத்தியத்துக்காகப் போராட்டம் நடத்தும் விவசாயிகளை உலகில் எந்த அரசாங்கத்தாலும் தடுக்க முடியாது. உண்மைக்கு முன்னால் அகம்பாவம் தோற்றுப்போகும் என்பதைப் பிரதமர் நினைவில் கொள்ள வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மோடி அரசு செவிசாய்த்து, கருப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். இது வெறும் ஆரம்பம்தான்'' எனப் பதிவிட்டுள்ளார்.