துணை முதல்வர் ஓ.பி.எஸின் அரசியல் அணுகுமுறைகளும், பண்புகளும், பணிவும் அவரை சமகால அரசியலில் இருந்து வேறுபடுத்தி காட்டி வருகிறது.

பொதுவாக எதிரெதிர் கட்சிகளை சார்ந்தவர்கள் எதிரும் புதிருமாகவே களத்தில் கடுகடுத்துக் கொள்வர். இது இன்று நேற்றல்ல. தமிழகத்தில் ஆதிகாலம் தொட்டே இந்த வழக்கமாகி விட்ட ஒன்று. ஒரு கட்சியினர் மாற்றுகட்சியினரை நடத்தும் விதம் மூர்க்கமும் வன்மமும் நிறைந்த அரசியலாகவே இருக்கும். தனக்கு உடன்பட்ட கருத்துக்களை மாற்றுக் கட்சியினரும் எடுத்தியம்பினால், அந்தக் கருத்தையே மாற்றிக் கொள்வதும் கூட இந்த அரசியலில் சர்வசாதாரணம். அப்படி வார்த்தைகளில் கூட எதிரும், புதிருமாக இருப்பவர்களின் செயல்பாடுகளை சொல்ல எத்தனையோ சம்பவங்கள் ஏராளமுண்டு. 

சுருக்கமாக சொல்ல வேண்டுமானல் முரண்பாடுகளின் கலவைதான் தமிழக அரசியல்கட்சிகளின் மூலதனமே. எதிர்கட்சியினரை நேருக்கு நேர் பார்த்துவிடக்கூடாது. பேசினால் இன்னும் குற்றம். அவர்களை பற்றி பாராட்டினால் மகாபாவம். மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தால் மரண தண்டனைக்கு ஈடான பாவம் செய்தவர்களாக பாவிக்கப்படுவார்கள். வீட்டு விஷேங்களில் கலந்து கொண்டால், ’கட்சி மாறிட்டாண்பா’எனக் கூறி கட்சியை விட்டு காய் நகர்த்திய சம்பவங்கள் எல்லாம் தமிழக அரசியலில் சர்வ சாதாரணம். 

ஆண்டவரே என கருணாநிதியை அழைப்பார் எம்.ஜிஆர். ஆனால், அப்படி நட்போடு அழைக்கப்பட்டு நண்பராக இருந்த கருணாநிதியே, எம்.ஜி.ஆர் மறைந்த போது வெளிப்படையாக அஞ்சலி செலுத்த வராமல் இரவில் யாருக்கும் தெரியாமல் வந்து போனதாகத் தகவல். அப்படி நேரடியாக வந்தால் திமுக தொண்டர்களின் பலிக்கு ஆளாக வேண்டுமாம்.

 

ஒரே சொந்தம் வெவ்வேறு கட்சிகளில் இருந்தால் பேசிக் கொள்ளாமல் உறவை முடித்துக் கொள்வதை தவிர வேறு வழியே இல்லை. அதற்கு சமீபத்திய உதாரணங்கள் ராமதாஸ்- காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிருஷ்ணசாமியும் சம்பந்திகள். இருவரும் எதிரெதிர் கூட்டணியில் இருப்பதால் உறவு முறிக்கப்பட்டது. 

அடுத்த உதராணம் எதிரும் புதிருமான கட்சிகளின் வாரிசுகள் காதல் நிறைவேறியதால் மணமகளின் தந்தை திருமணத்தை புறக்கணித்த கதையும் உண்டு. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஞானசேகரன் மகனுக்கும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.,யும், முன்னாள் அமைச்சருமான தம்பித்துரை மகளுக்கும் திருப்பதி திருமலையில் திருமணம் நடந்தது. மகள் திருமணத்தில், தம்பித்துரை கலந்துகொள்ளவில்லை. அவரைத் தவிர, குடும்பத்தினர், உறவினர்கள், தம்பித்துரையின் மனைவி டாக்டர் பானுமதி, அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 

இந்த சில உதாரணங்கள் ஒரு சோற்றுப்பானைக்கு ஒரு பதம். ஆனால், ஓ.பி.எஸ் சமீபகாலமாக எதிர்கட்சியினரிடம் காட்டும் அணுகுமுறை தமிழக அரசியல் களத்திற்கு புதிது. ஆரோக்கியமானது. அவரது சமீபகால நடவடிக்கைகள் எதிர்கட்சிகளையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. எதிர்கட்சிகள் கருத்தில், களத்தில், கொள்கையில், அரசியலில் எதிரானவர்களாக இருக்கலாம். ஆனால், எதிரிகள் கிடையாது என்பதை மெல்ல மெல்ல தமிழக அரசியலில் புகுத்தி வருகிறார் ஓ.பி.எஸ்.

 

அதற்கான சமீபத்திய உதாரணங்கள், தனது கட்சியினரின் உறவுகள் மறைவுக்கு மட்டுமல்ல. களத்தில் எதிரணியில் உள்ள உறவினர்களின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து வருகிறார். திமுக குடும்பத்தில் முக்கியமானவர்களாக பார்க்கப்படும் பாரம்பரியமாக திமுகவில் இருந்து வரும் மறைந்த தங்கப்பாண்டியன் மனைவியும், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயாருமான ராஜாமணி அம்மாளுக்கு இரங்கல் தெரிவித்த அணுகுமுறை வியப்பில் ஆழ்த்தியது.

 

அதாவது பரவாயில்லை. டி.டி.வி அணியில் இருந்த அமமுகவை சேர்ந்த பெரம்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் காலமான செய்தி கேட்டும் இரங்கல் தெரிவித்தது வியப்பின் உச்சம். காரணம் வெற்றிவேல், ஓ.பி.எஸை கடுமையாக விமர்சித்தவர். ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் இரங்கல் தெரிவித்து தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தினார். ஓ.பி.எஸின் இந்த ஆரோக்கிய அரசியல் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது.