இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தமிழக முதலமைச்சருக்கும் கடிதமாகவும் அவர் அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தின் முழு விவரம்:- 

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அத்தியாவசியத் தேவையின்றி செல்வதை கட்டுப்படுத்தும் விதமாகவும், அதனால் மற்றவர்களுக்கு கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாகவும் அமுல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறை, தமிழகத்தில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக இது கருதப்பட்டது. 

ஆனால் இப்போது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அதிகமாக்கப்பட்டுள்ளது. வேலை, தொழில் நிமித்தமாக மக்கள் மாவட்டத்திற்குள்ளேயோ, வெளியேயோ சென்று வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பலர் மிக மிக அவசியமான தேவைகளுக்குக் கூட இ-பாஸ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் சிலர் குறுக்கு வழியில் ஊழல் செய்து இ-பாஸ் வழங்க முயற்சிப்பதும், போலி இ-பாஸ் வழங்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. 

கணவன் மனைவி சந்திக்க முடியாத நிலை, பெற்றோர் பிள்ளைகள் சந்திக்க முடியாத நிலை என்று இது போன்று எண்ணற்ற உறவுகள், இ-பாஸ் முறையால் அவதிக்கு உள்ளாகும் குமுறல்கள் நமக்கு செய்தியாக வந்து சேர்கின்றன. மேலும் ,இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இ-பாஸ் வழங்கும் முறை கிடையாது. எனவே, மக்கள் படும் சிரமத்தை கருதி, தமிழ்நாடு அரசு, தமிழகத்திலும் இ-பாஸ் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த கடித த்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.