நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களம் இறங்கியுள்ளதால் சென்னை திருவொற்றியூர் தொகுதி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களம் இறங்கியுள்ளதால் சென்னை திருவொற்றியூர் தொகுதி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு வெறும் 12ஆயிரத்து 500 வாக்குகள் மட்டுமே பெற்ற சீமானால் ஐந்தாவது இடத்தையே பெற முடிந்தது. சீமானால் பாமக, த.மா.கா வேட்பாளரை கூட முந்த முடியவில்லை. இப்படியான சூழலில் சீமான் இந்த முறை தனது சொந்த ஊர் உள்ள தென் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீமான் கொளத்தூரில் ஸ்டாலினுக்கு எதிராக களம் இறங்க உள்ளதாக அறிவித்தார். அதே சமயம் அந்த முடிவில் இருந்தும் சீமான் பின்வாங்கி தற்போது திருவொற்றியூரில் களம் இறங்கியுள்ளார்.

திருவொற்றியூர் தொகுதியில் திமுக சார்பில் தற்போது கே.பி.சங்கர் வேட்பாளராகியுள்ளார். அதிமுக சார்பில் குப்பன் போட்டியிடுகிறார். சீமான் களத்தில் இருந்தாலும் உண்மையான போட்டி திமுக – அதிமுக இடையே தான் நிலவுகிறது. இதற்கு காரணம் தொகுதியில் தண்ணீராய் செலவழிக்கப்படும் பணம் தான். திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்காக பணத்தை பாதாளம் வரை பாய்ச்சுகிறார்கள். ஆனால் சீமான் தரப்பில் பிரச்சாரத்திற்கு கூட பணம் செலவழிப்பது இல்லை. இதனால் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் சீமான் என ஒருவர் திருவொற்றியூரில் போட்டியிடுவது கூட பலருக்கு தெரியவில்லை.

திருவொற்றியூர் தொகுதி மீனவர்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதி. அந்த வகையில் கே.பி.சங்கர் அந்த சமுதாய வாக்குகளை ஒட்டு மொத்தமாக கவர வியூகம் வகுத்து வருகிறார். ஆனால் ஏற்கனவே அங்கு திமுக எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் இருந்த கே.பி.பி.சாமி மீது மீனவர் கொலை வழக்கு உள்ளிட்ட சில கிரிமினல் வழக்குகள் இருந்தன. இதனால் அவரது தம்பியான கே.பி.சங்கரை மீனவ மக்கள் சற்றுத் தள்ளி வைத்தே பார்க்கின்றனர். அதிமுக சார்பில் களம் இறங்கியுள்ள குப்பன் ஏற்கனவே திருவொற்றியூரில் 2 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். மேலும் திருவொற்றியூர் தொகுதியை குறி வைத்து கடந்த ஓராண்டாகவே அவர் பணியாற்றி வருகிறார்.
ஆனால் திமுக வேட்பாளர் கே.பி.சங்கரை ராயபுரத்தில் போட்டியிட வைக்க திமுக தலைமை முயற்சி மேற்கொண்டது. இதனால் தனக்கு தொகுதி கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற நினைப்பில் தேர்தல் பணிகளை வேட்பாளர் அறிவிப்பிற்கு பிறகே சங்கர் தொடங்கினார். இதனால் தொகுதியில் குப்பனை முந்த சங்கர் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. சீமானை பொறுத்தவரை வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தை விட போட்டியிட்டால் போதும் என்கிற எண்ணத்தில் இருப்பது தெரியவருகிறது. பொதுவாக தேர்தல் களத்தில் வெற்றிக்கு பூத் கமிட்டி மிகவும் முக்கியம்.

ஆனால் சீமான் தரப்பு தற்போது வரை திருவொற்றியூரில் பூத் கமிட்டியே முழுமையாக அமைக்கவில்லை என்கிறார்கள். இதே போல் சீமானுக்காகவும் அங்கு நாம் தமிழர் நிர்வாகிகள் பெரிய அளவில் பிரச்சாரம் செய்யவில்லை. சீமானும் இதுவரை இரண்டு முறை மட்டுமே தொகுதிப்பக்கம் வந்துள்ளார். இதனால் திருவொற்றியூரில் சீமான் இந்த முறை 3வது இடம் பிடித்தாலே அது பெரிய விஷயம் தான்.
