திருவெற்றியூரில் திமுக எம்எல்ஏ கேபிபி சாமியின் மகன் அட்ராசிட்டி...!! பட்டதாரி இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்...!!
காரில் இருந்து இறங்கி நிர்மல் குமாரை எட்டி உதைத்தார், காரில் வைத்திருந்த கட்டையை எடுத்து நிர்மல் தாஸ் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கினார். இதில் வலி தாங்க முடியாமல் நிர்மலின் நண்பர்கள் ஆளுக்கொரு பக்கம் தெரித்து ஓடினர்.
சென்னை திருவெற்றியூரில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த பட்டதாரி இளைஞர் மீது திமுக எம்எல்ஏ கேபிபி சாமியின் மகன் பரசு பிரபாகரன் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் என்றாலே அங்கு திமுக முன்னாள் அமைச்சர் கே.பிபி சாமி வைத்ததுதான் சட்டம். அவரையோ அவரது குடும்பத்தையோ எதிர்த்து பேசும் அளவிற்கு அங்கு எவரும் கிடையாது. அரசியலுக்கு அரசியல் , பஞ்சாயத்துக்கு பஞ்சாயத்து இது தான் அங்குள்ள நிலைமை. அப்படி யாரேனும் பகைத்துவிட்டால் அவர்கள் நிம்மதியாகவே வாழ முடியாது. அந்தளவுக்கு கரைச்சல் கொடுத்துவிடுவார்கள். இந்நிலையில் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த தன் சொந்த சமூக இளைஞரின் மீதே கேபிபி சாமியின் மக்கள் பரசு பிரபாகரன் கொலை வெறிதாக்குதல் நடத்தியுள்ளார்.
அதாவது, கேவிகே குப்பம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் தாஸ், பட்டதாரி இளைஞரான இவர் நேற்றிரவு தனது நண்பர்களுடன் கேவிகே குப்பம் பகுதியிலுள்ள சாலையோரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த கே.பிபி சாமியின் மகன் பரசு பிரபாகரன் ,காரில் இருந்து இறங்கி நிர்மல் தாஸை எட்டி உதைத்தார், காரில் வைத்திருந்த கட்டையை எடுத்து நிர்மல் தாஸ் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கினார். இதில் வலி தாங்க முடியாமல் நிர்மல் தாஸின் நண்பர்கள் ஆளுக்கொரு பக்கம் தெரித்து ஓடினர். நிர்மல் தாஸின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்து ஓடி வந்த பொதுமக்கள், காயங்களுடன் விழுந்து கிடந்த நிர்மல் தாஸை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து நிர்மல் தாஸின் உறவினர்கள் எண்ணூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்,இந்நிலையில் தனியார் மருத்துவமனைக்கு வந்த போலீசார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிர்மல் தாஸிடம் புகார் எழுதி பெற்றனர். அதில் கேவிகே குப்பம் கிராம தேர்தலில் நிர்மல் தாஸ் போட்டியிடுவதற்காக மனு கொடுத்திருப்பதாகவும், அதைபொறுத்துக்கொள்ள முடியாத ஆத்திரத்தில் எம்எல்ஏவின் மகன் தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். பரசு பிரபாகரனால் நிர்மல் தாஸின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், உடனே பரசு பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என நிர்மலின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் பரசு பிரபாகரன் எம்எல்ஏவின் மகன் என்பதால் போலீசார் அவர்மீது உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற சந்தேகமும் அவர்களுக்கு எழுந்துள்ளது.