திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளரான சிவானந்தம் அதிரடியாக நீக்கப்பட்டு அப்பொறுப்பிற்கு எம்.எல்.தரணிவேந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய போலீஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் சிவானந்தம் (71). தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் தற்போது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் கடந்த 1996 மற்றும் 2006 நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் திமுக சார்பாக ஆரணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்ததார்.

இந்நிலையில், ஆரணியில் இவருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த அரிசி ஆலையை அடகு வைத்து கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.8 கோடி கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பண மோசடி குறித்து தனியார் நிதி நிறுவனம் சார்பில் திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் சிவானந்தம் மீது புகார் அளித்தனர். கடந்த வாரம் அதிகாலை 3 மணிக்கு திருவாண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தூங்கிக் கொண்டிருந்த சிவானந்தத்தை எழுப்பி அதிரடியாக கைது செய்தனர். இது திமுகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.சிவானந்தம் அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக எம்.எஸ்.தரணிவேந்தன் நியமிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டக் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டு கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.