கருணாநிதி 50,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி தற்போது காலியாக உள்ளதால், இடைத்தேர்தலை அறிவித்து உள்ளது தேர்தல் ஆணையம்.

வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள, தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் வரிந்துக்கட்டிக்கொண்டு வேட்பாளர் தேர்வில் இறங்கி உள்ளனர். இந்த நிலையில் திமுகவும், போட்டியிட விருப்பம்  உள்ளவர்களின் விண்ணப்பங்களை கேட்டு உள்ளது. வெளியில் இது ஒரு புறம் இருக்க, உள்ளுக்குள் நடக்கும் சங்கதிகள் வேறு மாதிரி உள்ளது. 

திருவாரூர் திமுக பிரமுகரான மறைந்த பூண்டி கலைச்செல்வனின் தம்பியும், தற்போதைய மாவட்ட பொறுப்பாளருமான பூண்டி கலைவாணன் தான் வேட்பாளர் என அனைவரும் காத்திருந்த நிலையில், தலைமையில் இருந்து கசியும் தகவல்கள் டெல்டா திமுகவினரிடரியே ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

அந்த தகவல் ஸ்டாலின் திருவாரூரில் போட்டியிட வேண்டும் என்பதே. ஏற்கனவே கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஸ்டாலின் திருவாரூரில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதால், தனது  தந்தையின் தொகுதியில், போட்டியிடுவதோடு மட்டுமின்றி, டெல்டா மாவட்ட திமுகவினருக்கு உத்வேகமும் சக்தியும் கிடைக்கும் என்பதால், ஸ்டாலினை களமிறக்க துடிக்கிறார்களாம் டி.ஆர்.பாலு போன்ற முன்னணி தலைவர்கள். விரைவில் திமுக கூட்டம் அறிவாலயத்தில் கூட உள்ள நிலையில், ஸ்டாலின் போட்டியிடுமாறு பெரும் அழுத்தம் தர தயாராக உள்ளனராம். 

ஒருவேளை ஸ்டாலின் போட்டியிட சம்மதித்து விட்டால், கொளத்தூர் தொகுதியை விட்டுவிடவும்  வாய்ப்பு உள்ளதாம். பொறுத்திருந்து பார்க்கலாம்.. கட்சியின் அழுத்தத்திற்கு ஸ்டாலின் அடி பணிவாரா  அல்லது புதிய வேட்பாளரை அறிவிப்பாரா என்பதை பார்க்க வேண்டும்.