தமிழகத்தில் 2016 சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் சீனிவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், தன்னுடைய வெற்றியை அறியாமல் அவர், மாரடைப்பால் இறந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் காலமானார். இதையொட்டி, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த வேளையில், கடந்த மாதம் திமுக தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவால் காலமானார். இதையொட்டி, திருவாரூர் தொகுதியிலும் இடைத் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகள் கடும் போட்டியில் உள்ளன. இதன் முன்னோட்டமாக அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன், பெரும்பாலான வாக்குகள் பெற்று மேற்கண்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என உறுதியாக கூறி வருகிறார். 

இதையொட்டி, திருவாரூர் தொகுதியில் தேர்தல் நேரத்தில் எவ்வித விளம்பரமும் செய்ய முடியாது என்பதால், இப்போதே வீட்டுககு வீடு சென்று, சுவர்களில் குக்கர் சின்னங்களை அமமுகவினர் வரைந்து வருகின்றனர். திருவாரூர் தொகுதியில் குக்கர் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைத்து, அனைத்து வாக்குகளையும் சேகரிக்க திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில், தொகுதி திமுகவினர், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

ஆனால், வீட்டின் உரிமையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருவதாக அதிமுகவினரும், திமுகவினரும் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், 20 ரூபாய் நோட்டை கொடுத்து, வெற்றி பெற்றதை போல, திருவாரூரில் நடத்த முடியாது. பணம் கொடுத்த பின்னரே, சுவரில் விளம்பரம் எழுத வேண்டும் என பொதுமக்கள் அடாவடியாக கேட்கிறார்களாம். அதை தாங்க முடியாமல், அமமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.