திருவாரூர் இடைத்தேர்தலில் டெல்டாவில் பலம் வாய்ந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தை நிறுத்தலாம் என்ற யோசனையை தலைமைக்கு அதிமுக கட்சி நிர்வாகிகள் முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவாருர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக, அமமுக ஆகிய கட்சிகள் இன்று அறிவிக்க உள்ளன. திமுக சிட்டிங் தொகுதி என்பதால், அந்தக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதிலேயே அனைவரது பார்வையும் குவிந்திருக்கிறது. ஆளும் அதிமுக யாரை நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவவில்லை. மாறாக, ஆர்.கே. நகர் தொகுதியில் மாஸ் காட்டிய தினகரனின் அமமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் காமராஜ் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. 

இந்நிலையில் திமுகவையும் அமமுகவையும் சமாளிக்கும் வகையில் அதிமுக வேட்பாளர் பலம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று ஆளும் தரப்பு நினைக்கிறது. நாளை கூட உள்ள அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் வேட்பாளர் யார் என்பது தெரிந்துவிடும். அதிமுக சார்பில் 20-க்கும் மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். என்றாலும், பலமான வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதில் இபிஎஸ் - ஓபிஎஸ் உறுதியாக இருக்கிறார்கள். 

அதற்கேற்ப டெல்டாவில் பலம் வாய்ந்தவராகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தை நிறுத்தலாம் என்ற யோசனையை கட்சி நிர்வாகிகள் இபிஎஸ்-ஓபிஎஸுக்கு தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதுபற்றி வைத்தியலிங்கத்துடன் கட்சி நிர்வாகிகள் பேசியிருக்கிறார்கள். ஆனால், வைத்தியலிங்கம் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 

தஞ்சாவூரைச் சேர்ந்த வைத்தியலிங்கம், தொகுதி மாறி திருவாரூரில் நிற்க விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் அவரை சமாதானப்படுத்தி நிறுத்த வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற இவர், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்தவர். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் வைத்தியலிங்கம். இதன்பிறகு அவரை ராஜ்ஜிய சபா உறுப்பினராக ஆக்கினார் ஜெயலலிதா.