Asianet News TamilAsianet News Tamil

அடி கொடுக்க தயாரான டிடிவி... திருவாரூர் அக்னி பரீட்சையில் வெல்லப்போவது திமுகவா? அதிமுகவா?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற உள்ள திருவாருர் தொகுதி இடைத்தேர்தல் யாருக்கெல்லம் ஆசிட் டெஸ்ட்டாக இருக்கப்போகிறது? 20 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்காகத் தமிழக அரசியல் கட்சியினர் காத்திருந்தனர். ஆனால், திருவாரூருக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Thiruvarur by election
Author
Tamil Nadu, First Published Jan 1, 2019, 10:06 AM IST

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற உள்ள திருவாருர் தொகுதி இடைத்தேர்தல் யாருக்கெல்லம் ஆசிட் டெஸ்ட்டாக இருக்கப்போகிறது?  20 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்காகத் தமிழக அரசியல் கட்சியினர் காத்திருந்தனர். ஆனால், திருவாரூருக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

நாடளுமன்றத் தேர்தலுக்கும் திருவாரூர் இடைத்தேர்தல் நடைபெறும் காலத்துக்கும் மூன்று மாதங்கள் மட்டுமே இடைவெளி. அடுத்த மூன்று மாதத்திலேயே நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிடுவதால், இடைத்தேர்தலில் வெற்றிபெறும் கட்சிக்கே மக்கள் ஆதரவு இருப்பது என்ற தோற்றத்தை இந்தத் தேர்தல் தரும். எனவே இந்த இடைத் தேர்தல் பலவகையில் அரசியல் கட்சியினருக்கு அக்னிப் பரீட்சையாக இருக்கப்போகிறது.

 Thiruvarur by election

திமுக 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக தலைவர் கருணாநிதி பிரமாண்டமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தொகுதி. திமுகவின் சிட்டிங் தொகுதி என்பதால், மற்ற கட்சிகளைவிட திமுகவுக்குத்தான் இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. Thiruvarur by election

2017-ம் ஆண்டு இறுதியில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததால், இந்த இடைத்தேர்தலில் அந்தக் கறையைப் போக்க வேண்டிய நிலையில் உள்ளது. கருணாநிதியின் சொந்தத் தொகுதி என்பதால், இந்தத் தொகுதியில் திமுக வெல்வதைக் கெளரக் குறைச்சலாகப் பார்க்கும். திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், இந்தத் தேர்தல் அவருடைய தலைமையை மதிப்பிடும் தேர்தலாகவும் அமைந்திருக்கிறது. ஒருவேளை அவரது சகோதரர் அழகிரி போட்டியிட்டால், அந்த இடையூரையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தத் தொகுதியை திமுக தக்கவைத்துகொண்டால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு அந்தக் கட்சிக்கு பெரிய நம்பிக்கையையும் கொடுக்கும். Thiruvarur by election

அதிமுக இருபது தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை அறிவிக்காமல், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தவகையில் அதிமுகவுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்திருக்கும். ஜெயலலிதா இருந்த காலத்திலேயே, அதிமுக பிளவுபடாமல் இருந்தபோதே திமுக பிரமாண்டமாக இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு இரண்டாம் பட்சம்தான் என்றாலும், தங்களுடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு உண்டு. ஆட்சி, அதிகாரம் என எல்லா வாய்ப்புகளும் இருந்தும், ஆர்.கே. நகரில் அதிமுக தோல்வியடைந்ததை அவர்கள் மறக்கவில்லை. Thiruvarur by election

அதிமுகவும் தொண்டர்களும் தம்மிடம்தான் உள்ளார்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையில் அதிமுக உள்ளது. தினகரனைவிட கூடுதல் வாக்கு வாங்கி காட்டினால்தான், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தோல்விக்கு அதிமுக பழி வாங்க முடியும். அதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் பிற கட்சிகள் அதிமுகவை நாடி வரவும் வழி ஏற்படும்.

அமமுக 18 தொகுதி இடைத்தேர்தலை ஆர்வமாக எதிர்பார்த்த கட்சி தினகரனின் அமமுக. திருவாரூர் இடைத்தேர்தலையும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்போல அணுக வாய்ப்பு உண்டு. அதிமுக தொண்டர்கள் தங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று தினகரன் அடிக்கடி கூறுவதை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த இடைத்தேர்தலிலும் அதிமுகவைவிட கூடுதல் வாக்கு வாங்கினால், தினகரனின் கை ஓங்கும். செந்தில் பாலாஜி அமமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் சேர்ந்த பிறகு, “திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவை ஒரு அடி அடித்தால், எல்லாம் சரியாகிவிடும்” என்று தினகரன் குறிப்பிட்டார். 

அந்த வகையில் திமுகவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் எல்லா வாய்ப்புகளையும் தினகரன் பயன்படுத்துவார். அதிமுகவை ஓரங்கட்டி வாக்குகளை தினகரன் பெற்றாலோ, திமுகவை வீழ்த்தி வெற்றி பெற்றாலோ நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் தலைமையில் கூட்டணி அமையும் வாய்ப்பையும் அதிகப்படுத்தலாம். 

 Thiruvarur by election

அழகிரி கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுகவில் சேர பல முயற்சிகளைச் செய்து ஒதுங்கியிருக்கும் அழகிரிக்கும் திருவாரூர் இடைத்தேர்தல் ஒரு பெரிய வாய்ப்புதான். ‘தொண்டர்களும் நண்பர்களும் கேட்டுக்கொண்டால், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்” என்று கடந்த செப்டம்பரில் அழகிரி அறிவித்திருந்தார். ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவாவது அழகிரி தேர்தலில் போட்டியிடலாம். தனக்கு உள்ள செல்வாக்கை அறியவும் களத்துக்கு வரலாம். ஒருவேளை தேர்தலில் போட்டியிடாவிட்டால், வாக்குகளைப் பிரித்து மற்றவர்களுக்கு மறைமுகமாக உதவும் முயற்சியை மேற்கொள்ளக்கூடும். 

பிற கட்சிகள் இந்த முன்று கட்சிகளைத் தாண்டி மற்ற கட்சிகள் தேர்தலில் போட்டியிடவும் செய்யலாம். தேர்தலை புறக்கணிக்கவும் செய்யலாம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தர்தலில் போட்டியிட்டதைப்போல பாஜக போட்டியிடலாம். 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலிலும் போட்டியிடுவோம் என்று அண்மையில் பாமகவின் அன்புமணி அறிவித்திருந்தார்.எனவே பாமக போட்டியிடக்கூடும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை புறக்கணித்ததைப்போல திருவாரூர் இடைத்தேர்தலையும் தேமுதிக புறக்கணிக்கலாம். தனக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதை அறிய கமலஹாசன் கட்சியினர் தேர்தலில் போட்டியிடலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios