திருவாரூரில் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுவதே நல்லது என்று ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளன. திமுக சார்பில் 4-ம் தேதி விருப்ப மனு அளிப்பவர்கள் ஆராயப்பட்டு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் கருணாநிதி குடும்பத்தினர் போட்டியிட விரும்புகிறார்கள். இதுதொடர்பாக ஸ்டாலினிடம் குடும்பத்தினர் பேசி இருக்கிறார்கள். 

கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூரில் 2011-ல் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், 2016-ல் சுமார் 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் கருணாநிதி பிரமாண்டமாக வெற்றிபெற்றார். கருணாநிதியை வாரி அரவணைத்த அந்தத் தொகுதியில் அவரது குடும்பத்தினர் போட்டியிடுவதே நல்லது என்றும் ஸ்டாலினிடம் ஆலோசனை கூறியிருக்கிறார்கள் கருணாநிதி குடும்பத்தினர். 

கடந்த காலங்களில் கருணாநிதி சார்பாக செல்வி இத்தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதால், அவரையே நிறுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, செல்வி இங்கே போட்டியிட்டால், அழகிரி கலகம் செய்யாமல் ஒதுங்கிவிடுவார் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதேநேரத்தில், திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் பூண்டி கலைவாணன் அந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கலாம் என்று திமுக நிர்வாகிகள் சார்பிலும் ஸ்டாலினிடம் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாத ஒரே திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் என்பதால், அவருக்கு வாய்ப்பு கொடுக்க கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் ஆதரவு உள்ளது. ஆனால், அவர் மீது சில வழக்குகள் உள்ளதால், அவரை நிறுத்த வேண்டாம் என அவருக்கு எதிர் கோஷ்டியினர் தலைமையை வலியுறுத்திவருகிறார்கள். இதில் ஸ்டாலின் என்ன முடிவு என்பதை திமுக தொண்டர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.