ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அ.தி.மு.க. அரசு எத்தனையோ அக்னி பரீட்சைகளை தாண்டி வந்திருக்கிறது. ஆனால் வரும் 28-ம் தேதி திருவாரூரில் நடக்க இருப்பது மிக மிக முக்கியமான சம்பவம்! அன்றுதானே அங்கு இடைத்தேர்தல். 

ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் அதிருப்தி கலகக்காரரான, சுயேட்சை வேட்பாளர் தினகரனிடம் அ.தி.மு.க. தோற்றதென்பதை கூட கஷ்டப்பட்டு ஜீரணித்துக் கொள்ளலாம். ஆனால் திருவாரூர் இடைத்தேர்தல் என்பது ஆளும் கட்சிக்கு மெய்யாலுமே செம்ம எக்ஸாம்தான். 

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள், ஒன்று! அது கருணாநிதியின் சொந்த ஊர் மட்டுமன்று, இறக்கும்போது அவர் எம்.எல்.ஏ.வாக இருந்ததும் இங்குதான். எனவே இந்த தொகுதியை ஜெயித்தே ஆக வேண்டும் எனும் வெறித்தனத்தோடு தி.மு.க. அங்கே இறங்கி, மிகக் கடுமையாய் போரிடும். கருணாநிதி தன் அரசியல் வாழ்வில் 13 முறை சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டார். அத்தனையிலும் வென்றார்! என்பது சரித்திர சாதனையாக அக்கட்சி பார்க்கிறது. அப்பேர்ப்பட்ட நபரின் சொந்த ஊரில், சொந்த தொகுதியில், ஸ்டாலின் தி.மு.க. தலைவரான பிறகு நடக்கும் இடைத்தேர்தல் என்பதாலும் இந்த தேர்தல் அக்கட்சிக்கு மிக முக்கியமானதாகிறது. 

மேலும் இந்த தேர்தல் முடிந்து, ரிசல்ட் வெளிவரும் நேரத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் நடவடிக்கைகள் மிக முழு வீச்சில் உச்சம் பெற்று நிற்கும். ஆக யுத்தம் செய்யப்போகும் தி.மு.க.வை வெல்வதென்பது  ஆளுங்கட்சியின் தலைவர் எடப்பாடியாருக்கு மிக மிக முக்கியம். தமிழகத்தில் காலூன்றிட துடிக்கும் பி.ஜே.பி.யானது, அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி வைக்கப்போகிறது என்பது கிட்டத்தட்ட  உறுதியாகிவிட்டது. நாடாளுமன்றத்துக்கு நெருக்கமான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இங்கு தோற்றால் அது ஒட்டுமொத்தமாக கூட்டணியின் சரிவுக்கு ரிப்பன் கட் பண்ணியது போல் இருக்கும். 

பி.ஜே.பி.யின் டெல்லி லாபி மிக மிக முக்கியமாக இந்த இடைத்தேர்தலை கவனிக்கிறது. இங்கே ஒருவேளை பி.ஜே.பி.யின் வேட்பாளரும் கூட நிறுத்தப்படலாம்! கண் துடைப்புக்காகவும், தி.மு.க.வுக்கான வாக்குகளை பிரிப்பதற்காகவும் நடக்கும் செயலாகத்தான் அது இருக்கும். ஆனால் அதைத்தாண்டி அ.தி.மு.க.  ஜெயிக்க வேண்டும், ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதாக காட்ட வேண்டும்! என்பதுதான் டெல்லியின் எய்மே. 

ஆக இவற்றைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடியார் இருக்கிறார். ‘எப்படியாவது திருவாரூர் இடைத்தேர்தலில் அடிச்சு தூக்கியே ஆக வேண்டும்!’ எனும் முறுக்குதலில் இருக்கும் அவர், வாக்காளர்களை கவரும் வகையில் சில திட்டங்களை அறிவிக்க வேண்டியது அவசியம். ஆனால் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால் திருவாரூர் தொகுதி மக்களுக்காக தனித்து எந்த பிரத்யேக சலுகைகளையும் அறிவிக்க முடியாது. எனவே பக்காவாய் பிளான் போட்டவர், தமிழக மக்கள் அனைவருக்குமான ஒரு திட்டமாக ஒன்றை அறிவித்தால் அது உள்ளபடியே திருவாரூர் சட்டமன்ற  மக்களையும் ‘கவர்’ செய்யும் எனும் நோக்கில், பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயை அறிவித்திருக்கிறார். 

இன்று துவங்கிய சட்டமன்ற தொடரில், கவர்னர் உரையில், ஓர் அறிவிப்பாக இது வெளியாகி இருக்கிறது. இந்த சந்தோஷ சலுகையானது திருவாரூர் மக்களுக்கும் தமிழக ஆட்சி மீது ஒரு அணுசரனையை உருவாக்கி, ‘பழனிசாமி நல்லாதான்யா கொண்டு போயிட்டு இருக்கிறாரு!’ எனும் மனப்பான்மையை ஏற்படுத்தி, வாக்குகளை கொட்ட வைக்குமா அல்லது ’இது தேர்தலை மையப்படுத்துன ஸ்டண்ட்’ என்று நினைக்க வைத்து காலை வாரிவிடுமா என புரியவில்லை. கவனிப்போம்!