திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் வழக்கு நிலுவையில் உள்ளதால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பற்றி இப்போது முடிவெடுக்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்தது. அப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யவிரதா சாஹூ நேரில் ஆஜராகி பதிலளித்தார்.

 

அதில் திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து காலியான திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஆனால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வந்தவுடன் தான் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றார். 

இதனையடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடும்படி மனுத்தாக்கல் செய்திருந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.