திருவாரூர் இடைத்தேர்தலை ஆளும் அதிமுக விரும்புகிறதா இல்லையா என்பதன் அடிப்படையிலேயே தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உருவாகி வருகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்தது. ஆனால், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இந்த இடைத்தேர்தலை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் விரும்பவில்லை என்பதை அவர்கள் அறிக்கை மற்றும் பேட்டியின் மூலம் வெளிப்படுத்திவிட்டார்கள்.

 

இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜாவும் திருவாரூர் தொகுதியைச் சேர்ந்த ஒருவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் டி.ராஜா மனுவும் அளித்தார். உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த இரு வழக்குகளிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதாட உள்ளனர். இதையெல்லாம் வைத்து தங்களுக்கு சாதகமான திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதை திமுகவே விரும்பவில்லை என்ற விமர்சனங்கள் பொதுவெளியில் வைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே திருவாரூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றிருக்கிறது. கஜா புயல் நிவாரணப் பணிகள் இப்போதுதான் நடைபெறுவதை மனுதாரர்கள்  முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இடைத்தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை உள்ளதா இல்லையா என்பது குறித்து அறிக்கை அனுப்புமாறு தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கேட்டிருக்கிறார்.

இதன்மூலம் இந்த அறிக்கையின் அடிப்படையில் இடைத்தேர்தலை நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பரில் திருவாரூரில்  இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்த வேளையில், மழைக் காலத்தைக் காரணம் காட்டி தேர்தலை தற்போது நடத்த வேண்டாம் என்று தலைமை செயலாளர் மூலம் ஆளும் அதிமுக கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியது. அதை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்தது. 

இப்போது பந்து மீண்டும் அதிமுகவுக்கு வந்துள்ளது. தற்போது ஆணையம் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் அரசு என்ன விருப்பம் கொண்டுள்ளது என்பதை அடிப்படையாக வைத்தே ஆட்சியர் அறிக்கையாகத் தர வாய்ப்பிருக்கிறது. திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரையும் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

 

திமுகவுக்கு சாதகமான தொகுதி, ஓட்டு வங்கியில் தினகரன் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு போன்ற விஷயங்களை வைத்து தற்போது அதிமுக இடைத்தேர்தலை விரும்பாவிட்டால், அது மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிக்கையில் வெளிப்பட வாய்ப்புள்ளது. இந்த அறிக்கையை வைத்துதான் இறுதி முடிவை தேர்தல் ஆணையம் எடுக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால், ஆட்சியரின் அறிக்கை முக்கியத்துவம் பெறக்கூடும். அந்த வகையில், தற்போது திருவாரூர் இடைத்தேர்தல் அதிமுக கையில் உள்ளதாகவும் சொல்லலாம்.