சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அந்த 4 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கு விருப்ப மனு வினியோகம் நேற்று  காலை 10 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் விருப்ப மனுக்களை பெற்றனர். பின்னர் அதனை பூர்த்தி செய்து தாக்கல் செய்தனர்.

காலை முதலே இந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுகவினர் பலர் விருப்ப மனு அளித்தனர். அதற்கான விண்ணப்பக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாயை செலுத்தி அவர்கள் மனு அளித்தனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் மரணமடைந்த ஏ.கே.போஸின் மனைவி, முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிருப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் மேற்கொண்டனர்.

இந்த தொகுதியில் பலர் விருப்ப மனு செய்திருந்தாலும், மதுரை அன்பு செழியனும் மனு அளித்துள்ளதுதான இங்கு ஹைலைட். அன்புசெழியன் அதிமுகவின் மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணியின் துணை செயலாளராக உள்ளார். 

சினிமா பைனான்சியர் திரைப்பட தயாரிப்பாளர், சினிமா பைனான்சியர் அன்பு செழியன் என்றால் தான் பலருக்கும் நினைவு வரும். அன்புசெழியனும், விருப்ப மனு தாக்கல் செய்து, நேர்காணலில் கலந்துகொண்டு விட்டார். நேர் காணல் முடிந்துவிட்ட நிலையில் யார், யார் வேட்பாளர்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

திருப்பரங்குன்றம் தொகுதியைப் பொறுத்தவரை அன்புச் செழியன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்கும் பசையுள்ள பார்ட்டி என்பதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது.