திமுக எம்எல்ஏ வீட்டில் போலீசார் நடத்திய திடீர் சோதனையின் போது பயன்படுத்தப்பட்ட 50 துப்பாக்கி குண்டுகள் சிக்கியுள்ள நிலையில் எதை சுடுவதற்கு இந்த குண்டுகளை எம்எல்ஏ பயன்படுத்தினார் என்று விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

நிலத்தகராறில் எம்எல்ஏ இதயவர்மன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இது தற்காப்புக்கான துப்பாக்கிச் சூடு என்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக எம்எல்ஏ வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின் போது குவியல் குவியலாக பயன்படுத்தப்பட்ட 50 துப்பாக்கி குண்டுகள் சிக்கியுள்ளன. பயன்படுத்தப்படாத துப்பாக்கி குண்டுகள் என்றால் கூட அது இனி பயன்படுத்த வைத்திருந்தோம் என விளக்கம் அளிக்கலாம்.

ஆனால் எம்எல்ஏ வீட்டில் சிக்கியிருப்பதோ பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குண்டுகள். அதுவும் 50 குண்டுகள் வரை சிக்கியுள்ளன. இதன் மூலம் தற்காப்புக்கு மட்டும் அல்ல அதற்கு முன்னதாகவே கூட எம்எல்ஏ தரப்பு துப்பாக்கியை பயன்படுத்தி வந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மக்கள் பிரதிநிதியான திமுக எம்எல்ஏவுக்கு எதற்கு 3 துப்பாக்கிகள். (இதுவரை அவர் வீட்டில் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன) மேலும் பல துப்பாக்கி குண்டுகளும் கூட சிக்கியுள்ளன. எம்எல்ஏ எதற்காக இத்தனை துப்பாக்கிகள் வைத்திருந்தார்? என கேள்வி மேல் கேள்வி எழுகிறது.

துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் திமுக எம்எல்ஏ சிக்கியதுமே இந்த விவகாரத்தை தீவிரமாக புலனாய்வு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் எம்எல்ஏவுக்கு நெருக்கமான சிலரை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் எம்எல்ஏ வீட்டிற்கு நேற்று முன் தினம் திடீரென போலீசார் புகுந்துள்ளனர். அங்கிருந்து மேலும் ஒரு துப்பாக்கி மற்றும் குண்டுகள் சிக்கியுள்ளன. இதில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளும் சிக்கியது தான் வழக்கில் அதிரடி திருப்பமாக பார்க்கப்படுகிறது.

எம்எல்ஏ தற்போது ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த  நிலையில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அவர் வீட்டில் சிக்கியுள்ளதால் போலீசார் புதிதாக விசாரணை கோணத்தை மாற்ற உள்ளனர். எம்எல்ஏவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வீட்டில் சிக்கிய துப்பாக்கி குண்டுகள் எதற்காக வைக்கப்பட்டுள்ளன? வீட்டில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் கிடைத்துள்ளனவே, அவற்றை பயன்படுத்தி எதையெல்லாம் சுட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ள எம்எல்ஏவிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

இதனால் எம்எல்ஏவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தை நாடுவார்கள் என்று தெரிகிறது. இதனை அடுத்து காவல் கிடைக்கும் பட்சத்தில் அவரை நேரடியாக வீட்டிற்கே அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்றும் சொல்லபப்டுகிறது. இது ஒருபுறம் இருக்க, திருப்போரூர் காட்டுப்பகுதியில் விஐபிக்கள் பலர் வேட்டைக்கு செல்வதாக பகீர் புகார் எழுந்துள்ளது. அந்த காட்டுப்பகுதியில் உள்ள மான்கள், முயல்கள் உள்ளிட்டவை வேட்டையாடப்படுவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மான் சடலம் ஒன்று சிக்கியதாகவும் கூறுகிறார்கள்.

இந்த விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சையை தவிர்க்கரகசிய விசாரணை நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் திருப்போரூரை மையமாக வைத்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதால் மான் வேட்டை விவகாரத்தை வனத்துறை மட்டும் அல்லாமல் காவல்துறையும் விசாரணைக்கு எடுக்க உள்ளதாக கூறுகிறார்கள். இதில் யார் யாரெல்லாம் சிக்கப்போகிறார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும்.