திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான பணிகளை டி.டி.வி தினகரன் கன ஜோராக தொடங்கியுள்ளார். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றாலும் கூட 20 ரூபாய் டோக்கன் மூலமாக தினகரன் வெற்றி பெற்றார் என்கிற பிரச்சாரம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது.

திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான பணிகளை டி.டி.வி தினகரன் கன ஜோராக தொடங்கியுள்ளார். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றாலும் கூட 20 ரூபாய் டோக்கன் மூலமாக தினகரன் வெற்றி பெற்றார் என்கிற பிரச்சாரம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. மேலும் மக்களும் தினகரன் 20 ரூபாய் டோக்கன் கொடுத்துவிட்டு தற்போது ஏமாற்றிவிட்டார் என்றே நம்பி வருகின்றனர். இந்த அவப்பெயரை போக்க வேண்டும் என்றால் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்று தினகரன் துடித்துக் கொண்டிருக்கிறார்.

இடைத்தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தினகரன் கன ஜோராக தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதியில் உள்ள கட்சியின் முக்கிய பிரமுகர்களை தொடர்பு கொண்டு வாக்காளர் எண்ணிக்கை, பெண் வாக்காளர்கள் எத்தனை பேர், திருப்பரங்குன்றத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள ஜாதியினர் யார், வெற்றியை தீர்மானிக்கப்போவது எந்த ஜாதி? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்றுள்ளார் தினகரன். 

மேலும் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் எத்தனை பேர் உறுப்பினர்களாகியுள்ளனர் என்கிற தகவலை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் சென்னைக்கு அனுப்பி வைக்க தினகரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் 100 வாக்காளர்களுக்கு ஒரு நிர்வாகி என்று நியமித்து இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் நடவடிக்கையையும் தினகரன் தொடங்கியுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரையை வேட்பாளர் என்று இறுதி செய்துள்ள தினகரன் திருவாரூர் தொகுதிக்கும் விரைவில் வேட்பாளரை இறுதி செய்துவிடுவார் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்னரே தேர்தல் பணிகளை பாதி முடித்துவிட வேண்டும் என்று தினகரன் தலைமை கழக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் போதும் நாடாளுமன்ற தேர்தலில் அசத்திவிடலாம் என்பதால் செலவை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று தினகரன் கூறியுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கிசுகிசுத்து வருகிறார்கள்.