திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிக்கு டிசம்பரில் தேர்தல் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. போஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2-ம் தேதி மதுரையில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். 

அவர்களின் மறைவையடுத்து திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் மறைந்தால் அந்த தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளாகும். இதன் அடிப்படையில் 6 மாதங்களுக்குளய் தேர்தல் நடைபெற உள்ளது. திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரி மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் டிசம்பர் மாதத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது.

 

வழக்கமாக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறும் போது நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்துவது வழக்கம். அந்த வகையில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தொகுதிகளும் காலியாக உள்ளது. ஆனால் 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தகுதி நீக்க வழக்கில் விசாரணை நீடித்தால் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது உறுதி என்பதால் அரசியல் கட்சியினர் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.