திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி "இனிமேல் என்றும் திமுக கோட்டை தான்" என்றும் தொகுதிக்குள் நான் செய்த திட்டப்பணிகளை அதிமுக மாவட்டச்செயலாளரும் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன்செல்லப்பா  செய்வது போல் திரித்து செய்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்  திமுக எம்எல்ஏ டாக்டர்.சரவணன். 

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர் தான் டாக்டர்.பா.சரவணன். திருப்பரங்குன்றம் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தண்ணீர் லாரி மூலம் மக்களுக்கு குடிதண்ணீர் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க ட்ரோன் மூலம் கிமிநாசிகளை தெளித்தது முதல் பல்வேறு நலத்திட்டங்களை தொகுதிக்குள் தொடர்ந்து செய்து வருகிறார் இவர்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... "மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்பு எண்ணற்ற தொகுதி மேம்பாட்டு செயல்களை செய்து கொண்டு வருகின்றேன். முக்கியமாக எனது தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வருகிறேன். மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் தொகுப்பை மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் மற்றும் மதுரை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆகியோர்களுக்கு பரிந்துரை கடிதங்களை கொடுத்து வருகிறேன்.

மதுரை ஊரக வளர்ச்சி மகமை திட்ட இயக்குனர் ஆகியோரை நேரில் சந்தித்து நிலையூர் ஊராட்சிக்குத் தேவையான தார் சாலைகள் 1.73லட்சம் மதிப்பீட்டில் வேலை நடந்துவருகின்றது.பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், சமுதாயக்கூடம், பொது கழிப்பறை, போர்வெல் அமைத்து மேல்நிலை தொட்டி கட்டுதல், கழிவுநீர் சாக்கடை சீரமைத்தல், ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல் , நியாயவிலைக் கடைக்கு அரசு கட்டிடம் அமைத்தல் , தனி டிராஸ்பார்ம் அமைத்தல் , நிழற்குடை அமைத்தல், பேவர்பிளாக் சாலை அமைத்தல், சோடியம் விளக்கு அமைத்தல் போன்ற எண்ணற்ற பணிகளை நிலையூர் ஊராட்சியில் செயல்படுத்த வேண்டும் என்று நான் மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தி வந்தேன். அதன் அடிப்படையில் இன்று திருப்பரங்குன்றத்திற்கும், நிலையூருக்கும் இடையே தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. 

 அதிமுக மாவட்ட செயலாளர்களில் ஒருவரான ராஜன்செல்லப்பா ஏற்பாட்டில் என் தொகுதிக்குள் வேலைகள் நடப்பதாக செய்திகள் திரித்து வரவைக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் கொரோனாவிற்கு பயந்து வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட மாவட்ட செயலாளர் அவருடைய சொந்த தொகுதியான வடக்கு தொகுதிக்கே செல்லாதவர். என் தொகுதியில் எவ்வாறு அவர் மேம்பாட்டு செயல்களைச் செய்ய முடியும்.அவர் என்ன ராஜசபா எம்பியா?


மதுரையில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் கொரொனாவை வைத்து அவ்வப்போது காமெடி அடித்து வருகிறார்கள். ஒருவர் சொல்லுகிறார் மாஸ்க் அணிந்தால் மூச்சு திணறல் ஏற்படும்;போடலைனா மூச்சு நின்னுடும்னு சொல்லுறார்.இன்னொரு அமைச்சரோ முக கவசம் அணியாமல் பழகிட்டேன்னு சொல்லுறாரு. உலகசுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. முககவசம் அணியுங்கள் ;தனித்திருங்கள் விலகி இருங்கள் என்று ஆனால் நம்ம மாநில அமைச்சர்கள் காமெடி பண்ணுறாங்க. இதுயெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.

 நான் முயற்சி எடுத்து திருப்பரங்குன்றம் தொகுதி நிலையூரில் செய்த அனைத்து பணிகளையும் அதிமுகவினர் தான் செய்தது போல சித்தரிப்பது வேடிக்கையாக இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்களுக்கு காசு கொடுத்து வெற்றி பெற்ற ராஜன்செல்லப்பா அடுத்த முறை அவ்வாறு செய்து தனது சொந்த தொகுதிலேயே வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து எப்படியாவது திருப்பரங்குன்றம் தொகுதியினை முயற்சி செய்யலாம் என்று பகல் கனவு கண்டு வருகிறார். நடக்கவிருக்கும் தேர்தலை மனதில் வைத்து ஆளும் கட்சி என்ற மமதையில் இவ்வாறு செய்திகளை பரப்பி வருகின்றனர். அது நிச்சயமாக நடக்காது. அடுத்தமுறை தமிழகத்தை ஆட்சி செய்யப்போவதே திமுக தலைவர் முக ஸ்டாலின்தான் என்பதை சின்ன குழந்தையினை கேட்டால் கூட சொல்லி விடும். இனிமேல் திருப்பரங்குன்றம் என்றுமே திமுக கோட்டை தான்..

அதிமுக கோட்டையாக இருந்த திருப்பரங்குன்றம் தற்போது திமுக கையில் இருக்கிறது. திருப்பரங்குன்றம் தொகுதி தான் ராஜன்செல்லப்பாவிற்கு கனவு தொகுதி . எதிர்பாராத விதமாக வடக்கு தொகுதி அமைந்தது. திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே தொகுதி முழுவதையும் தயார் நிலையில் வைத்திருந்தவர் ராஜன்செல்லப்பா. இடைத்தேர்தலில் திமுக  ஜெயித்துவிட்டது என்பதற்காக அந்த தொகுதி திமுக கோட்டையாக மாறிவிடாது. அது என்றைக்கும் அதிமுக கோட்டை என்பது அனைவருக்குமே தெரியும்.நடக்க இருக்கும் சட்டமன்றத்தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தான் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.