திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணனுக்கு சொந்தமான மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக பெண் ஒருவர் இறந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

மதுரையில் சரவணனுக்கு சொந்தமான சரவணா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நிலையூர் பகுதி கிழக்கு தெருவைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற பெண் என்ற பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவரை உடனே மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். உங்களால் அதிக பணம் செலவு செய்யமுடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பஞ்சவர்ணம் அங்கேயே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து அவரின் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தவறான சிகிச்சையால் பஞ்சவர்ணம் உயிரிழந்துவிட்டதாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க வேட்பாளர் சரவணன் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சமயத்தில் அவரது மருத்துவமனையின் மீது புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.