திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் எப்போது நடத்தப்பட்டாலும், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.  திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது பேசிய துணை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திருப்பரங்குன்றம் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது என்றார். கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் உறுதியாக அதிமுக வெல்லும் என்றும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் ஓ.பி.எஸ். கூறினார். 

அதிமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள், செயல்வீரர்கள் ஆகியோர் அதிமுகவில்தான் இருக்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் ஆர்வத்துடனும், எழுச்சியோடும் இருக்கிறார்கள் என்றார்.எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறேன் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக தமிழகத்துக்கு வரும்; அதில் எந்தவித ஐயப்பாடும் தேவையில்லை என்றும் கூறினார். 

திருப்பரங்குன்றம் தொகுதியில் இதுவரை நடந்த தேர்தலில் அதிக அளவில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்றும் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை என்றும் துணை முதலமைச்சர் கூறினார். தமிழக முதலமைச்சராவது பற்றி நடிகர் விஜய் பேசியது குறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்களுக்கு முதலமைச்சராக கூடிய ஆசை உள்ளது. 

யார் எந்த கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம் என்றார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ரெட் அலர்ட் எச்சரிக்கை குறித்த கேள்விக்கு, பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கிட்டத்தட்ட 3 முறை அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

திருப்பரங்குன்றத்தில் அதிமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். உள்ளாட்சி தொடர்பான நீதிமன்ற வழக்கு முடிந்தவுடன் தேர்தல் நடத்தப்படும. எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிபெறும். மக்களின் ஆதரவு பெரும்பான்மையாக உள்ளது. எல்லா துறையும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.