திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், அத்தொகுதியை காலி இடமாக அறிவிக்கக் கூடாது என்று திமுக வேட்பாளர் சரவணன், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சரவணனின் இந்த மனு தாக்கல் காரணமாக திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடத்தப்படுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

 

திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஏ.கே.போஸ், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் உயிரிழந்தார். அவர் காலமானதை அடுத்து திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, ஏ.கே.போஸை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன், கடந்த மாதம் 7 ஆம் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார். 

அந்த மனுவில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 116 இன்படி தொகுதி தொடர்பாக வழக்கு இருக்கும்போது, அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மறைந்தால், நிலுவையில் உள்ள அந்த வழக்கு தொடர்பாக அரசிதழ் மற்றும் செய்தித்தாள்களில் அறிவிப்பு செய்த பிறகே, தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டும். 

ஆனால், அந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் தேர்தல் ஆணையம் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் மறைவைத் தொடர்ந்து, தொகுதி காலியானதாக அறிவித்திருப்பது மக்கள் பிரதி நிதித்துவச் சட்டத்தை மீறியாக செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், திமுகவைச் சேர்ந்த சரவணன், நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி அவரது இடதுகை பெருவிரல் ரேகை தேர்தல் படிவத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் படிவத்தில் ஜெயலலிதா சுயநினைவோடுதான் கைரேகை வைத்தாரா என சந்தேகமாக உள்ளது.