அடுத்த பொதுத்தேர்தலின்போது அதிமுக ஆட்சிக்கு வராது என்றும் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் அதிமுக அரசை மத்திய அரசு கலைக்க முடியாது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணை தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. எழுதிய வெற்றிப்படிக்கட்டு புத்தகத்தின் ஆங்கில பதிப்பு வெளியீட்டு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான அனில் சாஸ்திரி புத்தகத்தை வெளியிட, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்குப் பிறகு திருநாவுக்கரசர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் பாராளுமன்றத்தில் வெளிநடப்பு இருக்குமே தவிர, வெளியேற்றம் இருக்காது.

ஆனால், பா.ஜனதா ஆட்சியில்  காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளியேற்றம் செய்யப்பட்டு காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் நிலை வந்துள்ளது. இது ஜனநாயக விரோத செயலாகும். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது என்று கூறினார்.

மத்திய பாஜக அரசு காங்கிரஸ் இல்லாத தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆட்சியை கலைக்க முற்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் கலையும் அ.தி.மு.க. அரசை தாங்கி பிடிக்கிறது. புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக செயல்படும் ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என்றார்.

தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கு முன்பாவது நிபந்தனை விதித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருக்கும் வரை நீட் தேர்வை நடத்த முடியாது என உறுதியாக இருந்தார். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு ஏன் பயந்து ஒடுங்கி, நடுங்குகிறார்கள் என தெரியவில்லை என்று குற்றம் சாட்டினார்.

பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் அ.தி.மு.க. அரசை மத்திய அரசு கலைக்க முடியாது. இதுபோன்ற பிரித்தாளும் சூழ்ச்சியினால் கலைக்க முடியும். அதற்கான வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் எப்போது வரும் என தெரியவில்லை. ஆனால் அடுத்த பொது தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.