நாங்குநேரி தொகுதியில் காங்கிரசும், விக்ரவாண்டி தொகுதியில் திமுகவும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமலேயே தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது நாங்குநேரி. காரணம் அந்த தொகுதிக்கு திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே குறி வைத்திருப்பது தான். கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நாங்குநேரி ஒதுக்கப்பட்டது. அங்கு போட்டியிட்ட வெற்றி பெற்ற வசந்தகுமார் கன்னியாகுமரி எம்பி ஆகிவிட்டதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் காலியாகியுள்ள நாங்குநேரியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் காய் நகர்த்துகிறது. ஆனால் கொடுத்த எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பிறகு வரும் தேர்தலிலும் எப்படி காங்கிரசுக்கே அந்த தொகுதியை கொடுக்க முடியும்எ ன்று திமுக மேலிடம் கருதுகிறது. மேலும் நாங்குநேரியில் காங்கிரசுக்கு வாய்ப்பளிப்பது அந்த தொகுதியை அதிமுகவிற்கு விட்டுக் கொடுப்பதற்கு சமம் என்றும் ஸ்டாலின் கருதுகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நிலையில், வரும் இடைத்தேர்தலிலும் அந்த வெற்றியை தொடர வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு உள்ளது. அதனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி என இரண்டிலும் வெற்றிவாகை சூடவே திமுக திட்டம் போட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி எம்பியும் தமிநாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் இந்த விவகாரத்தில் பதிய பார்முலாவை முன்வைத்துள்ளார்.

அதாவது விக்ரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரசும் போட்டியிட வேண்டும் என்பது தான் அந்த பார்முலா. இது எப்படி இருக்கிறது என்றால்? நாங்குநேரியை காங்கிரசுக்கு ஒதுக்கினால் தான் விக்கிரவாண்டியை திமுகவிற்கு ஒதுக்க சம்மதிப்போல் என்பது போல் உள்ளது. தற்போது வெறும் எம்பியான திருநாவுக்கரசர் எப்படி யாருக்கு என்ன தொகுதி என்று பேட்டி அளிக்கலாம் என்று காங்கிரசுக்குள்ளேயே புகைச்சல் கிளம்பியுள்ளது.