thirunavukkarasar says that modi will replaced by rahul

தமிழகத்தில் பொம்மலாட்ட ஆட்சி நடக்கிறது. இதனை மத்திய அரசு மிரட்டி நடத்தி வருகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

முன்னாள் பிரதமத் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தையொட்டி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் சத்திய மூர்த்தி பவனில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், மாநில தலைவர் திருநாவுக்கரசர், நக்மா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது திருநாவுக்கரசர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன், வேலை இல்லாத இளைஞர்கள் 1.5 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக மோடி அறிவித்தார். அதேபோல் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு, பொதுமக்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என கூறினார். ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எதுவும் நடக்கவில்லை.

விரைவில் மத்தியில் உள்ள ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மோடி அகற்றப்படுவார். ராகுல் காந்தி பிரதமர் பதவியில் உட்காருவார்.

மாட்டு இறைச்சி சாப்பிடாதவர்கள் யாரும் இல்லை. இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களும் சாப்பிடுகிறார்கள். இதற்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது. மாட்டு இறைச்சி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், அரசுக்கு ஏற்படும் வருவாயும் பாதிக்கும். இதனை காங்கிரஸ் கண்டிக்கிறது. கண்டனம் தெரிவிக்கிறது.

பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் யார் எதை சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாது. விருப்பம் உள்ளவர்கள், சாப்பிடுகிறார்கள். விருப்பம் இல்லாதவர்கள் சாப்பிட மாட்டார்கள். அவர் உத்தரவிடுவது என்றால், அவரது கட்சியினருக்கு மட்டும் உத்தரவிடவேண்டும்.

தமிழகத்தில் உள்ள அதிமுகவும், மத்தியில் உள்ள பாஜகவும் வேறு காட்சிகள் அல்ல இரண்டும் ஒன்றுதான். தற்போது அதிமுக, பாஜகவின் பிடியில் இருக்கிறது. பாஜக, அதிமுகவை மிரட்டி பயமுறுத்தி வழி நடத்தி செல்கிறது.

முதலில் ஓ.பி.எஸ்.சிடம் பேசிய பாஜக போதிய பலம் இல்லை என இபிஎஸ் அணியை நாடியது. அங்கும் பலம் குறைவாக உள்ளதால், இரு அணியையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பஞ்சாயத்து செய்கிறது என கூறினால், தவறில்லை.

அதிமுகவில் யார் முதல்வர், யார் பொது செயலாளர் என்பதில் பெரும் குழப்பம் உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி பாஜக கையாள்கிறது. தமிழகத்தில் காலூன்ற முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் நடப்பது பொம்மலாட்ட அரசாங்கம். இதனை கயிறு மூலம் கட்டி மோடி நடத்தி வருகிறார்.

சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைக்க கூடாது என அனைத்து தரப்பினரும் கூறுகிறார்கள். முன்னாள் முதல்வர்கள் படம் இருக்கும் இடத்தில் அவரது படத்தை வைக்க அனுமதிக்க கூடாது என்றால், உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ அதற்கான அனுமதி பெற்று வைக்கலாம்.

ஆனால்,யார் அனுமதியும் பெறாமல், ஊழல் குற்றவாளி என குறிப்பிடப்பட்டுள்ள ஒருவரின் படத்தை வைக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.