அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதில்லை, உட்கட்சி குழப்பத்தாலேயே அதிமுக கலையும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்தார். அப்போது அவரிடம், தனது மகள் திருமண அழைப்பிதழை திருநாவுக்கரசர் வழங்கினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அவரது ரசிகர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் கூறியிருந்தனர்.

விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வரும் 20 ஆம் தேதி, திருச்சியில், காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில், ரசிகர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, திருநாவுக்கரசர் தனது மகள் திருமண அழைப்பிதழை நடிகர் ரஜினிகாந்திடம் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்திடம், மகள் திருமணத்துக்கான அழைப்பிதழ் அளித்ததாக கூறினார். மேலும், அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூற வேண்டியதில்லை என்ற அவர், உட்கட்சி குழப்பத்தாலேயே அதிமுக கலையும் என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.