தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாமக தலைவர் ராமதாசை, அவரது பாமக அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று மதியம் சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ம.க. அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை நேரம் நடந்தது.
அப்போது, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பா.ம.க. துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது டாக்டர் ராமதாஸ், திருநாவுக்கரசர் இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. பின்னர், வெளியே வந்த திருநாவுக்கரசர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.
தமிழக காங்கிரஸ் தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி வருகிறேன். தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசியிருக்கிறேன்.
அந்த அடிப்படையில் டாக்டர் ராமதாசையும் சந்தித்து பேசினேன். டாக்டர் ராமதாஸ் என்னுடைய நீண்ட கால நண்பர். தமிழகம் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களை நாங்கள் பேசினோம் என்றார்.
