மாமல்லபுரத்தில் சீன அதிபரை வரவேற்கும் போது பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து உற்சாகமாக காட்சியளித்தார். இது தமிழர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. வெட்டி சட்டையில் இருந்த பிரதமரின் புகைப்படம் இரண்டு நாட்களாக வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் பிரதமரின் இந்த செயல்பாட்டை சில அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக பேசி வருகின்றனர். திருச்சி மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் பிரதமரின் தமிழக உடை குறித்து விமர்சித்துள்ளார். அவர் கூறும்போது, வேட்டி - சட்டை அணிந்து வலம் வந்ததால் பிரதமர் மோடி தமிழராகிவிட முடியாது என்றார். மோடி குப்பை பொறுக்கியதால் என்ன லாபம்? அவர் தங்கி இருந்த ஓட்டல் 5 நட்சத்திர ஓட்டல் வெளிநாட்டவர்கள் தங்கும் இடம் என்றும் அது எப்போதும் சுத்தமாகவே இருக்கும்.  என்றார்.

குப்பை பொறுக்குவது என்கிற மலிவான விளம்பரம் மூலம் மக்களை பிரதமர் திசை திரும்புவதாக குறிப்பிட்ட திருநாவுக்கரசர், ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் அதை திசை திருப்ப முயற்சிக்கிறார். ஆனால் அது தமிழ்நாட்டில் எடுபடாது என்றார் . பிரதமரின் இந்த செயல்பாடுகளால் வேலை வாய்ப்போ, தொழில் வளமோ கிடைக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பிரதமரும்- சீன அதிபரும் சந்தித்தது நல்லதுதான் என்றாலும் இந்தியாவை வணிக சந்தை இடமாக இந்த சந்திப்பின் மூலம் ஆக்கிவிடாமல் முதலீடு, தொழில், வேலை வாய்ப்பு கிடைக்கிற வகையில் பயனுள்ள ஒப்பந்தங்கள் ஏற்பட்டால் நிச்சயமாக வரவேற்கலாம் என்றார். இல்லையென்றால் பல கோடி செலவில் நடத்தப்பட்ட 2 நாள் பயணில்லா திருவிழாவாகவே இந்த சந்திப்பு கருதப்படும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.