Thirunavukarasar explain regards Modi meets Karunanidhi

கருணாநிதியை மோடி சந்தித்துவிட்டு போன பிறகு தமிழக அரசியலில் ஆயிரம் அனுமானங்கள், விமர்சனங்கள். தி.மு.க. - காங் கூட்டணி உடைந்துவிடும், அ.தி.மு.க.வை பா.ஜ.க. கழட்டிவிட்டு விடும் என்று வரிசை கட்டின. 

இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து திருவாய் மலர்ந்திருக்கும் திருநாவுக்கரசர்..”கருணாநிதியை மோடி சந்தித்தது தப்பில்லை, ஒருவேளை சந்திக்காமல் இருந்தால்தான் தப்பு. அப்பல்லோவில் இருந்த ஜெயலலிதாவையும் அவர் சந்தித்து இருக்க வேண்டும். 

உடல்நிலை குறைவாக இருந்த எம்.ஜி.ஆரை அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு அனுப்பியவர் அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்திதான். ஒரு தேசத்தின் பிரதமர், மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் மீது அக்கறை காட்டிட வேண்டும். அதுவே தேவையும், ஆரோக்கியமும். 

அதனால் கருணாநிதியை, மோடி சந்தித்ததில் அரசியல் முக்கியத்துவமுமில்லை, அந்த சந்திப்பால் எங்கள் கூட்டணிக்குள் எந்த விரிசலும் விழவில்லை. இதை நான் மட்டுமல்ல தி.மு.க.வின் செயல்தலைவர் ஸ்டாலினே சொல்லிவிட்டாரே!” என்றவர் “கட்சி விவகாரங்களின் என் மகன் ராமச்சந்திரன் தலையிடுவதாக ஒரு புகாரை சொல்கிறார்கள்.

கடந்த பொது தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டவர் வெறும் 1000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றார். எதிரணி பணபலத்தால் மட்டுமே சின்ன வித்தியாசத்தில் ஜெயித்தது. தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகப்பிரிவு தலைவராக உள்ளார். தமிழகம் முழுக்க பொறுப்பாளர்களை நியமித்து சிறப்பாக பணியாற்றி கட்சி வளர்க்கிறார்.

டெல்லி சொல்லும் கட்டளைகளை தலைமேல் தாங்கி செய்து முடிக்கிறார். 
இதெல்லாம் கட்சி விவகாரங்களில் தலையிடும் செயலென்றால், அதை அவர் தொடர்ந்து செய்யத்தான் செய்வார்.” என்று அதிரடியாய் பேசியிருக்கிறார் அரசர்.