Asianet News Tamil

’சந்தர்ப்பவாத நவபார்ப்பனர்...’ திமுக எம்.பி.,யை பொளேரென போட்டுத்தாக்கிய திருமுருகன் காந்தி..!

சந்தர்ப்பவாத நபராக அப்பட்டமாக வெளிப்பட்ட ஒரு ’நவபார்ப்பனர்’ என திமுக மக்களவை எம்.பி., செந்தில்குமாரை மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 
 

Thirumurugan Gandhi, who portrayed the DMK MP senthilkumar
Author
Tamil Nadu, First Published May 2, 2020, 12:24 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சந்தர்ப்பவாத நபராக அப்பட்டமாக வெளிப்பட்ட ஒரு ’நவபார்ப்பனர்’ என திமுக மக்களவை எம்.பி., செந்தில்குமாரை மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘’திமுகவின் தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.செந்தில் அவர்களின் தமிழீழப் போராட்டம் குறித்த கருத்து என்பது ஆரிய பார்ப்பனீய மனநிலையின் அப்பட்டமான வெளிப்பாடே.பாராளுமன்ற உறுப்பினரின் கலாட்டா இணையத்திற்கான பேட்டியில் பேசும் பொழுது தமிழீழத் தேசியத் தலைவரைப் பற்றிய மேற்காட்டுதலில் ‘இலங்கையின் போர் வீரர்’ (11:17) ’குழந்தைகளை ஆயுதம் ஏந்த வைத்தல்’(15:18) ‘விடுதலைப்புலிகள் விசயம் முடிந்து போனது’ (16:32) ’அவங்களுக்கான பிரச்சனை வரும்போது’ (16:47) என்கிறார்.

தேசியத்தலைவர் பிரபாகரனை இலங்கையின் போர் வீரர் என்கிறார். பார்ப்பனீய ஆற்றல்களான துக்ளக், சுப்பிரமணிய சாமி போன்றவர்களே தமிழீழம் என்பதை உச்சரிக்க மறுப்பவர்கள். தமிழர்கள் தங்கள் தேசத்தை தமிழீழம் என்றே பதிவு செய்கிறார்கள், இலங்கை என்றல்ல.இலங்கையும், தமிழீழமும் ஒன்றல்ல, திராவிட நாடும், பாரதமும் ஒன்றல்ல. மேதகு.பிரபாகரன் தமிழீழத்தின் தலைவர், அவர் இலங்கைக்கான தலைவர் அல்ல. இது தமிழீழத்தின் வரலாற்று அடிப்படை.

தமிழகத்தின் ஆரம்பநிலை திராவிட இயக்க அரசியல் மாணவனுக்கு புரிந்த வரலாறு இது. பார்பபனர்களின் தேசிய குறியீட்டு அரசியலை மிகநுட்பமாக முன்வைப்பது அறியாமையிலா? வன்மத்தினாலா? அறியாமையெனில் தம்மை எப்படி திராவிட இயக்க ஆதரவளராக காட்டிக்கொள்கிறார்? அவங்களுக்கான பிரச்சனை வரும்போது என்று ஈழத்தமிழர்களுக்கு பிரச்சனை வரும் போது பேசலாம் என்பது போல பேசுகிற மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு, போரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் பெண்களும், குழந்தைகளுமாக கிட்டதட்ட 3 ஆண்டுகளாக தமிழீழத்தின் வீதிகளில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்திய தேசிய ஆதிக்க மனநிலை கொண்டவர்களின் கண்ணுக்கு மட்டுமே இது தென்படாமல் போகிறது.

குழந்தைகளை ஆயுதம் ஏந்த வைத்தார் எனும் பார்ப்பனர்களின் பொய் பரப்புரையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார் திரு.செந்தில். குழந்தைப் போராளிகள் பற்றிய சாசனங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலேயே, தாய்-தந்தையரை-குடும்பத்தினரை இழந்த குழந்தைகள், விடுதலைப் புலிகளின் அரவணைப்பில் இருந்தவர்கள், குறைந்த வயதில் இருந்தவர்கள் எனப் பலரை ஐநாவின் யுனிசெப் நிறுவனத்திடம் விடுதலைப்புலிகள் இயக்கம் ஒப்படைத்தது. இதை ஆவணமாகவே யுனிசெப் வெளிப்படுத்தியிருக்கிறது. இப்பணியை செய்தவர்கள் இப்பொழுதும் சாட்சியங்களாக இருக்கின்றனர். 2002இல் பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொழுது இது குறித்து மிகத் தெளிவாக தேசியத்தலைவர் பேசி இருக்கிறார். இதைவிட முக்கியமாக திரு.செந்தில் அவர்களால் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைவில் தோழர்.கொளத்தூர் மணி இருக்கிறார்.

 இருந்தும் அப்பட்டமான பொய்யை, வரலாற்றைத்திரிக்கும் பார்ப்பனிய மனநிலையில் ஒரு விடுதலைப் போராட்டத்தின் மீதும், அதன் இயக்கத்தின் மீதும் அவதூறை வீசிச்செல்கிறார். குழந்தைப் போராளிகள் என்ற பார்ப்பன துக்ளக் கூட்டத்தின் பிரச்சாரத்தை அறிந்தவருக்கு, திராவிட இயக்கத் தலைவர்கள் தோழர்.கொளத்தூர்மணி, தோழர்.கோவை.ராமகிருட்டிணன், திமுகவின் மூத்த தலைவர் திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.தமிழச்சி தங்கப்பாண்டியன் போன்றோரிடம் விவரம் அறிந்து தமது வருத்தத்தை தெரிவித்து உண்மை விவரம் அறிந்திருக்கலாம். ஆனால் திட்டமிட்டே இக்களங்கத்தை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது அள்ளிவீசும் நேர்மையற்ற பார்ப்பனிய அரசியலுக்காக அவரது பகிரங்க மன்னிப்பை கோருகிறோம்.

ஒரு விடுதலைப் போராட்டம் தன் கோரிக்கையை வெல்லும் வரை முடிந்து போனதாக வரலாறு கிடையாது. 300 ஆண்டுகளுக்குப் பின் கட்டலோனியா எழுந்திருக்கிறது. கடுமையான இழப்புகளை சந்தித்தப் பின்பும் குர்திஸ்த்தான் உயிர்ப்போடு முன்னுக்கு நகர்கிறது. கான் அப்துல்கபார்கான் இறந்து முப்பது ஆண்டுகள் கடந்த பின்னும் வசிரிஸ்த்தான், பலூச்சிஸ்தான் விடுதலை கேட்கிறது, யாசர் அராபத்திற்கு பின்பும், தமது விடுதலைக்காக பாலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள். மக்பல்பட் கொல்லப்பட்டும் நாற்பது ஆண்டுகள் கடந்தும் காசுமீர் தன் விடுதலைக்கான நேசத்தை இழந்துவிடவில்லை. அறிஞர். அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கை கைவிடப்படலாம், ஆனால் காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று தொடர்ச்சியை தொட்டுக்காட்டுகிறார். இதே காசுமீருக்காகவும், தமிழீழத்திற்காகவும் அன்றே பேசியவர் தந்தைப் பெரியார் அவர்கள்.

வரலாறு விநோதமானது, அது அரசியல்வாதிகளை தன் பக்கங்களில் எழுதுவதில்லை. மாறாக போராளிகளால் தனக்கு புதிய பக்கத்தினை படைத்துக் கொள்கிறது.

உழைக்கும் மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு கட்சியின் தற்போதய தலைமுறையில் உருவாகி இருக்கும் இளம் தலைவர்கள், இந்திய தேசிய பார்ப்பனிய மனநிலை கொண்டவர்களாக, இந்தியத் தேசிய விரிவாதிக்க ஆற்றல்களாக, அதிகார மைய மனநிலை கொண்டவர்களாக வளர்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை இவர் பேட்டி வெளிப்படுத்துகிறது. இது எவ்விடத்திலும் போராடும் மக்களின் குரலாக நிற்கும் தந்தைப்பெரியாரின் திராவிட இயக்க சனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தவில்லை. சந்தர்ப்பவாத நபராக அப்பட்டமாக வெளிப்பட்ட ஒரு ’நவபார்ப்பனரையே’இப்பேட்டி அடையாளம் காட்டி இருக்கிறது’’என அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios