தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஐநா மனித உரிமை ஆணையத்தில் பேசியதை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் திருமுருகன் காந்தி. இவர் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவரை 40 நாட்களுக்கும் மேலாக சிறையில் தனிமை சிறையில் அடைத்து வைத்திருப்பதாக அவரது கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

திருமுருகன் காந்தி வேறு யாருடனும் பேச அனுமதிக்கப்படாத நிலையில், சரியாக காற்றோட்டம் கூட இல்லாத அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என தெரிவித்திருக்கும் அவரின் இயக்கத்தினர்,திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.


இது குறித்து அவர்கள் வெளியிட்டிருந்த கட்சி அறிக்கையில் திருமுருகன் காந்தியை அடைத்து வைத்திருக்கும் அறையில் காற்றோட்டம்  சரியாக இல்லாததால் சுவாசக் கோளாறு பிரச்சினை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

அவரது அறைக்கு அருகில் புதர் மண்டியிருப்பதால் பகல் நேரத்திலேயே அறைக்குள் பாம்பு நுழைந்திருக்கிறது. முறையான உணவும் அவருக்கு வழங்கப்படுவதில்லை. சிறைக்குள் மயங்கி விழுந்த அவரை காவல் பணியாளர் தான் பார்த்து சிறை  மருத்துவரிடம் கொண்டு சென்றிருக்கிறார்.  
 
அவருக்கு முறையான சிகிச்சை கூட அளிக்கப்படுகிறதா என தெரியவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.அதற்கேற்ப சிறையில் இருக்கும் திருமுருகன் காந்தி உடல் நலிவுற்று மருத்துவ சிகிச்சைக்காக காத்திருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. 

இதனால் இந்த அறிக்கையை படித்த பிறகு நெட்டிசன்கள் பலரும் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ”படுகொலைகளை நிகழ்த்துவதற்கும், படுகொலைகளை எதிர்ப்பவர்களை - அதனை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சேர்த்து நீதி கோருபவர்களை சிறையில் அடைப்பதற்கும், அந்த தேசம் ஸ்ரீலங்காவாகவோ, அரசு தலைவர் ராஜபக்சேவாகவோ இருக்க வேண்டுமென்பதில்லை” என்று இச்சம்பவத்தினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.