சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தும் சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். பாலஸ்தீனத்தில் நடந்தது போல் போராட்டம் நடைபெறும் என 2017-ல் பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதிய வழக்கின் கீழ் விசாரணை இல்லாமல் 6 மாதம் வரை சிறையில் வைக்க முடியும்.

முன்னதாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராக திருமுருகன் காந்தி கருத்து தெரிவித்து வருகிறார். ஐநா சபையில் சேலம்-சென்னை 8 வழிச்சாலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பாக பேசிவிட்டு திரும்பியபோது பெங்களூர் விமான நிலையத்தில் திருமுருகன் காந்தியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து ராயப்பேட்டையில் மற்றொரு வழக்கு தொடர்ந்து கைது செய்தனர். சிறிய கட்சிகளின் குரல்களை ஓடுக்கும் நோக்கில் மாநில அரசு இதுபோன்ற வழக்குகளை பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் திருமுருகன் காந்தி பேசும் போது, பாலஸ்தினத்தில் நடந்த போராட்டம் போல் இங்கும் விரைவில் நடக்கும் என பேசியதாக அவர் மீது ஊபா (UAPA) 13 (1) (b) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை குண்டர் சட்டம், தேசதுரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து வந்த காவல்துறையினர் தற்போது ஊபா சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சட்டத்தால் விசாரணை இல்லாமல் 6 மாதம் வரை சிறையில் வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்கீழ் கைதானவரால் ஜாமீன் பெற முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம், 7 வருடம் தண்டனை தர முடியும். தடா, பொடா சட்டங்கள் போன்ற வலுவான சட்டமாகும். இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.