வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திருமுருகன் காந்தியை பார்க்க அவரது உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தூத்துக்கு துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிவிட்டு திரும்பிய திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலூரில் தனிமைச் சிறையில் திருமுருகன் காந்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் உள்ளது. மேலும் சிறையில் யாரும் பயன்படுத்தாத பாழடைந்த கட்டிடத்தில் உள்ள ஆபத்தான அறை ஒன்றில் திருமுருகன் காந்தி அடைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அத்துடன் சிறையில் வழங்கப்படும் உணவுகள் திருமுருகன் காந்திக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றும், சில சமயங்களில் மோசமான உணவுகள் வழங்கப்படுவதாகவும், பல தருணங்களில் உணவே வழங்கப்படுவது இல்லை என்றும் மே 17 இயக்கத்தினல் கூறி வருகின்றனர் .இதனால் சரியாக சாப்பிடாத திருமுருகன் காந்தி உடல் நிலை கடந்த வாரம் முதல் முறையாக மோசம் ஆனது. 

இதனை தொடர்ந்து சிறையில் மயங்கி விழுந்த திருமுருகன் காந்தியை காவலர் ஒருவர் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அன்றைய தினமே திருமுருகன் காந்தியை மருத்துவர்களின் அறிவுறுத்தலையும் மீறி சிறைக்காலவர்கள் மீண்டும் சிறைக்கு கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தொடர்ந்து உணவு சரியில்லை என்ற புகாரால் சாப்பிடுவதை குறைத்துக் கொண்ட திருமுருகன் காந்தி நேற்று முன் தினமும் மயங்கி விழுந்தார். 
   
இதனை அடுத்து வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் திருமுருகன் காந்தி அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். குடல் பாதிப்பு, செரிமான பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் அவருக்கு 3வது நாளாக அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் உள்ள திருமுருகன் காந்தியை பார்க்க அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.