சாதிவெறி மதவெறி பிடித்த சழக்கர் கும்பல் எப்போதும் சிறுத்தைகள் மீதுமட்டுமே  வன்முறை முத்திரை குத்தும் என பாமக நடத்திய நேற்றைய போராட்டத்தை திருமாவளவன் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சென்னையில் நேற்று வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி ஆங்காங்கே ஆர்பாட்டமானது நடைபெற்று வந்தது. இதில் பாமக கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் பா.ம.க. போராட்டம் நடத்தியது. இதில் கலந்துகொள்ள வந்த பா.ம.க. தொண்டர்கள் சென்னை மற்றும் புறநகரில் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை அருகே பெருங்களத்தூரில் கற்கள் வீசி ரயில்களை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’கடந்த ஃபிப்ரவரியில் திருச்சியில் பல இலட்சம் பேர் திரண்ட 'தேசம் காப்போம் பேரணி' யில் சிறுத்தைகளின் மாந்தநேய மாண்பை வெளிப்படுத்தும் மகத்தான பதிவு. ஆனால், சாதிவெறி மதவெறி பிடித்த சழக்கர் கும்பல் எப்போதும் சிறுத்தைகள் மீதுமட்டுமே  வன்முறை முத்திரை குத்தும். உரிமைக்கான போராட்டம் எப்படி நடத்துவதென்று விடுதலை சிறுத்தைகளிடம் கேளுங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.