ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி முதல்வரை தேர்வு செய்ததைப் போல துணை முதல்வரை தேர்வு செய்ய முடியாது , இந்த விஷயத்தில் மத்திய அரசு எதாவது தலையிட்டால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என திருமா வளவன் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த திருமா வளவன் கூறியதாவது:
முதல்வரின் பரிந்துரை இல்லாமல் கவர்னரால் துணை முதல்வரை நியமிக்க முடியாது. ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி முதல்வரை தேர்வு செய்ததைப் போல துணை முதல்வரை தேர்வு செய்ய இயலாது. 

துணை முதல்வர் பதவியை முதல்வர் விரும்பினால் மட்டுமே நியமிக்க முடியும். தற்போதைய நிலையில் முதல்வரால் துணை முதல்வரை பரிந்துரை செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே துணை முதல்வர் கோரிக்கை என்பது பொருளற்றதாகி விடுகிறது.

முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சு துறைகளை மூத்த அமைச்சர்கள் தங்களுக்கு இடையில் பகிர்ந்து கொண்டு ஆட்சி நிர்வாகப் பணிகளை கவனிக்கலாம்.

மூத்த அமைச்சர்கள் ஒட்டு மொத்த ஆட்சி நிர்வாகத்தை கவனிக்கும் ஒரு பொறுப்புக்குழுவை தங்களுக்கிடையில் உருவாக்கி கொள்ளலாம். இது ஆளும் கட்சியின் உட்கட்சி விவகாரமாகும். அந்த பொறுப்புக்குழு ஆட்சி நிர்வாகத்தை கவனிக்கிற அதிகாரம் கொண்ட குழு என்பதை வெளிப்படையாக அறிவிக்கலாம்.

மற்றபடி ஆளுநர் தன்னிச்சையாக துணை முதல்வரை நியமிக்க முடியாது. ஆளும் கட்சியினரும் தங்களுக்கிடையில் ஒரு துணை முதல்வரை தேர்ந்து எடுக்க முடியாது. மத்திய அரசு எந்த வகையிலும் தலையிட முடியாது. 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால், ஆட்சி நிர்வாகம் நிலை குலைந்து போனால் ஆளுநரின் அறிக்கையை பெற்று அதன் அடிப்படையில் மத்திய அரசு தலையிட வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் அப்படி ஒரு தேவை எழவில்லை.

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு அரசை மத்திய அரசு போதிய ஆதாரம் இல்லாமல் கலைத்து விட முடியாது. தேசத்தின் பாதுகாப்பிற்கு அல்லது தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து வரும் சூழ்நிலையில்தான் அரசியல் சட்டம் 356-ஐ பயன்படுத்தி ஒரு மாநில அரசை மத்திய அரசு காலைக்க முடியும்.

தமிழகத்தில் அப்படி எந்த நெருக்கடியும் உருவாகி இருப்பதாக தெரியவில்லை. பெரும்பாலான நாட்கள் பிரதமர் இந்தியாவில் இல்லாமலேயே இந்திய அரசு இயங்கவில்லையா? எனவே தமிழக அரசை கலைத்தால் பொதுமக்கள் இடையே அதற்கு கடும் எதிர்ப்பு உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.