கூட்டணியில் ஒரே ஒரு சீட் மட்டுமே ஒதுக்க முடியும் என்று விசிக மற்றும் மதிமுகவுக்கு நேற்று இரவு அவசர தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டாகவே தி.மு.க கூட்டணியில் தாங்கள் இருப்பதாக விசிக மற்றும் மதிமுக கூறி வருகின்றன. ஆனால் துரைமுருகனோ இரண்டு கட்சிகளுமே தோழமை கட்சிகள் தான் என்று திட்டவட்டமாக கூறினார். தேர்தல் சமயத்தில் தோழமை கட்சிகள் கூட்டணி கட்சியாகுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் துரைமுருகன் கூறினார். இதனை கேட்ட வைகோ கொந்தளித்தார். 

ஆனால் ஸ்டாலினோ துரைமுருகனை கண்டிக்கவில்லை. இதன் மூலமே மதிமுக, விசிக கட்சிகளுக்கு கூட்டணியில் முக்கியத்துவம் இல்லை என்பது தெளிவானது. ஆனாலும் வேறு வழியில்லாமல் தி.முக கூட்டணிக்கு இரண்டு கட்சிகளுமே சப்பை கட்டு கட்டி வந்தன. இந்த நிலையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த வாரம் இந்த இரண்டு கட்சிகளுடனும் நடைபெற்றது. ஆனால் வைகோவோ 4 தொகுதிகளும், விசிகவோ 3 தொகுதிகளும் வேண்டும் என்று கூறியுள்ளன. 

வைகோவுக்கு தமிழகத்தில் தற்போது புள்ளி 5 சதவீத வாக்கு கூட கிடையாது என்பது தான் சபரீசன் டீமின் ஆய்வு முடிவு. இதே போல் திருமாவளவனை கூட்டணியில் சேர்ப்பதால் கிடைக்கும் வாக்கை விட அவர் மூலமாக திமுக கொங்கு மண்டலத்திலும் வட மாவட்டங்களிலும் அதிக வாக்குகளை இழக்க நேரிடும் என்றும் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அந்த இரண்டு கட்சிகளுடனும் ஒரு கட்ட பேச்சுவார்த்தையோடு தி.மு.க நிறுத்தி வைத்துள்ளது. மேலும் ஆளுக்கு ஒரு தொகுதி வந்து கையெழுத்து போடுங்கள் என்று நேற்று இரவு அவசர தகவலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

தேமுதிக கூட்டணிக்கு வர உள்ளதால் சில விஷயங்களை விட்டுக் கொடுத்து தான் ஆக வேண்டும் என்றும் தி.மு.க தரப்பில் இருந்து வைகோவுக்கும் திருமாவுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை தலா ஒரு தொகுதிக்கு இரண்டு கட்சிகளும் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு கலைஞர் பாணியில் இதயத்தில் இடம் இருப்பதாக கூறி தேமுதிக கேட்பதை கொடுத்து சேர்த்துக் கொள்ளும் முடிவில் ஸ்டாலின் தரப்பு இருப்பதாக கூறுகிறார்கள். 

இதனால் தி.மு.க கூட்டணியில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. திமுக தொகுதி உடன்பாடு குறித்து திங்களன்று நாள் முழுவதும் வைகோ தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார். அதன் பிறகு 3 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என்று தி.மு.கவிற்கு தகவல் அனுப்பி பார்த்தார். ஆனால் ஒரே ஒரு தொகுதி தான் என்றே பதில் வந்துள்ளது. இதே போல் திருமாவளவனும் ஒரே ஒரு தொகுதி தான் என்றால் திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா? என்று தனது நிர்வாகிகளுடன் விடிய விடிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.