நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியே வேண்டாம் தனித்து போட்டியிடலாம் என்கிற முடிவுக்கு திருமாவளவன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தான் திருமாவளவன் தனித்து போட்டியிட்டார். பின்னர் 2006 தேர்தலில் அதி.மு.கவுடன் கூட்டணி, 2009ல் தி.மு.கவுடன் கூட்டணி, 2011 சட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.கவுடன் கூட்டணி என்று சவாரி செய்தார் திருமா. 2014 தேர்தலிலும் கூட தி.மு.கவுடன் கூட்டணியை தொடர்ந்தார்.

ஆனால் கடந்த 2009 தேர்தலில் ஒரே ஒரு எம்.பி சீட்டை வென்ற திருமாவால் அதன் பிறகு எந்த தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்று 3வது அணியில் களம் இறங்கினார். இதிலும் திருமாவளவனுக்கு படு தோல்வி தான் கிடைத்தது.

இதனை தொடர்ந்து மறுபடியும் தி.மு.க கூட்டணியில் ஐக்கியமானார் திருமா. ஆனால் தி.மு.கவோ தாமரை இலை தண்ணீரை போல பட்டும் படாமலும் விசிகவுடன் தோழமை உணர்வு கொண்டிருந்தது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணிக் கதவை திருமா மிக பலமாக தட்டிப் பார்த்தும் ஸ்டாலினிட இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதற்கு காரணம் விசிகவிற்கு ஒரே ஒரு தொகுதி என்று ஸ்டாலின் அடம் பிடிப்பது தான்.

ஆனால் 2009 மற்றும் 2014ல் திமுக 2 தொகுதிகள் கொடுத்ததை சுட்டிக்காட்டி தற்போதும் 2 தொகுதிகளை கேட்டு வருகிறார் திருமா. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று தி.மு.க கூறிவிட்டது. இதனால் வேறு கூட்டணிக்கு செல்லலாம் என்றால் அதிமுகவுடன் பா.ம.க இருக்கிறது. எனவே அங்கு திருமா செல்ல வாய்ப்பு அடைபட்டுவிட்டது.இருப்பது ஒரே ஒரு வாய்ப்பு தான் கமல் அல்லது தினகரனுடன் இணைய வேண்டும். ஆனால் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

எனவே கடந்த 2004 தேர்தலில் தனித்து களம் இறங்கி வாக்கு வங்கியை காட்டியது போல் தற்போதும் விசிகவின் வாக்கு வங்கியை காட்ட வேண்டும் என்கிற முடிவுக்கு திருமா வந்துவிட்டதாக கூறுகிறார்கள். எனவே வட மாவட்டங்களில் செல்வாக்குள்ள தொகுதிகளை மட்டும் அடையாளம் கண்டு வேட்பாளர்களை களம் இறக்க திருமா தயாராகி வருவதாக சொல்கிறார்கள். திமுக ஒரே ஒரு தொகுதி தான் என அடம் பிடித்தால் தனித்து போட்டி என்று அறிவிக்கும் ஏற்பாட்டில் திருமா தீவிரம் காட்டி வருகிறார்.