பட்ஜெட் குறித்து விசிக தலைவர் திருமா வெளியிட்டுள்ள அறிக்கைள்:  ’’இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு துரோகத்தையும், விளிம்பு நிலை மக்களுக்கு அநீதியையும் இழைத்துள்ளது. நாட்டை மீள முடியா கடனில் தள்ளியிருப்பதோடு புதிய திட்டங்கள் ஏதும் இல்லாத பட்ஜெட்டாக இது உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ள பட்ஜெட் இது.

வறட்சி, புயல் என அடுத்தடுத்து இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் அண்மையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசும் கடன் தள்ளுபடி செய்யுமென விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கான திட்டம் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை.

சமூகத்தின் நலிந்த பிரிவினரை இந்த பட்ஜெட் வஞ்சித்துள்ளது. இந்த மாநிலத்தின் இருபது விழுக்காடு மக்கள் தொகையைக் கொண்ட ஆதிதிராவிடர்களுக்கு  மிகக்குறைந்த நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்களது குடியிருப்புகளில் வசதி செய்துதர நூறு கோடி ஒதுக்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் ஆதிதிராவிடர் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களது குடியிருப்புகளை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டு அதன் மூலமே ஏறக்குறைய நூறு கோடி ரூபாய் அளவுக்கான நிதி வழங்கப்பட்டு வந்தது. அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த ஏற்பாடு கைவிடப்பட்டது. 

ஆதிதிராவிட மாணவர்கள் உயர் கல்வி பயிலும் போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த படிப்பு உதவித் தொகை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று அதற்குக் காரணம் கூறினார்கள். ஆனால், மத்திய அரசின் நிதி வழங்காவிட்டாலும் மாநில அரசின் நிதியிலிருந்தே அதைக் கொடுப்போம் என துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த ஆண்டு கூறியிருந்தார். ஆனால், அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அந்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை. உயர்கல்வி உதவித்தொகைக்காக 2018-19 பட்ஜெட்டில் 1838.24 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தனர். இந்த பட்ஜெட்டில் 1,857.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்குத் தகுதியுள்ள சுமார் ஒன்பது இலட்சம் ஆதிதிராவிட மாணவர்கள் இருக்கும் நிலையில் இந்தத் தொகை போதாது. அதுமட்டுமின்றி இப்படி ஒதுக்கப்படும் தொகையைக் கல்வி நிறுவனங்கள் பெருமளவில் மோசடி செய்துள்ளன என்பதை தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ள நிலையில் ஒதுக்கப்பட்டுள்ள இந்தத் தொகை உரிய மாணவர்களுக்கு சென்று சேர்வதை அரசு உறுதிசெய்யவேண்டும். 

விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான உணவுத் தொகை பள்ளி மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 30 ரூபாய், கல்லூரி மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 33 ரூபாய் என  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. அந்தத் தொகை இந்த பட்ஜெட்டில் உயர்த்தப்படவில்லை. 

பழங்குடி இன மாணவர்களுக்கான புதிய பள்ளிகள் துவங்குவதற்கு தொண்டு நிறுவனங்கள் முன்வந்தால் அவர்களுக்கு உதவுவதற்காக இருபத்தைந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகையைக் கொண்டு அரசே தரமான பள்ளிகளை உருவாக்க முடியும்.  அரசு தனது பொறுப்பை கைகழுவுவதாகவே இதைக் கருதவேண்டியுள்ளது. 

2018-2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கென நலத் துறைக்கென 3,549கோடி;  இந்த ஆண்டு 3,810 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் துணைத் திட்டங்களின் கீழ் அவர்களது மக்கள் தொகைக்கேற்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டும். அப்படி ஒதுக்காமல் தொடர்ந்து தமிழக அரசு வஞ்சித்து வருகிறது. 

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு எந்தத் திட்டமும் இந்த நிதி நிலை அறிக்கையில் இல்லை. கஜா புயலால் பதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடு ஒன்றுக்கு  1.70 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அது போதுமானதல்ல குறைந்தபட்சம். மூன்று இலட்சம் ரூபாயாவது ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். 

தமிழ்நாட்டின் கடன் சுமார் நான்கு லட்சம் கோடியை நெருங்குவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. அவற்றை எப்படி அடைக்கப் போகிறார்கள் என்பதற்கு எந்தவொரு வழியும் இதில் கூறப்படவில்லை. மத்திய வரிகளின் பகிர்வில் தமிழகத்துக்கான பங்கு மோடி அரசாங்கத்தால் குறைக்கப்பட்டதை இதில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். மத்திய அரசு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதி கணிசமாக குறைந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக்கூறி தமிழக அரசு தனது கண்டனத்தை தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக  மோடி அரசுக்கு நன்றி சொல்வதற்காக இந்த பட்ஜெட்டை பயன்படுத்தி இருப்பது பாஜகவின் அச்சுறுத்தலுக்கு எந்த அளவு இவர்கள் பயப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடும் இந்த பட்ஜெட்டில் செய்யப்படவில்லை. மீண்டும் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலைக்கே அவர்களைத் தமிழக அரசு தள்ளியிருக்கிறது. 

ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கு வழி வகுக்காத, வேலை வாய்ப்புகளை உருவாக்காத, விளிம்பு நிலை மக்களுக்கு அநீதி இழைக்கும், விவசாயிகளுக்குத் துரோகம் செய்யும் பட்ஜெட் ஆகும்.’’