Asianet News TamilAsianet News Tamil

இதுதானே உங்க பிளான்? இரயில்வே நிர்வாகத்தை தெறிக்கவிடும் திருமாவாவன்...

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை மெல்ல மெல்ல அப்புறப்படுத்தும் ஆபத்தை வரவேற்க இயலுமா? காலப்போக்கில் இரயில்வே துறையில் இந்தி அல்லது ஆங்கிலம் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்கிற நிலை உருவானால், தமிழர்களும் இந்தி கற்றாகவேண்டும் என்கிற கட்டாயம் உருவாகும் இதுதானே உங்கள் பிளான் என திருமாவளவன் கூறியுள்ளார். 
 

Thirumavalavan statements railway departments
Author
Chennai, First Published Jun 16, 2019, 12:00 PM IST

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை மெல்ல மெல்ல அப்புறப்படுத்தும் ஆபத்தை வரவேற்க இயலுமா? காலப்போக்கில் இரயில்வே துறையில் இந்தி அல்லது ஆங்கிலம் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்கிற நிலை உருவானால், தமிழர்களும் இந்தி கற்றாகவேண்டும் என்கிற கட்டாயம் உருவாகும் இதுதானே உங்கள் பிளான் என திருமாவளவன் கூறியுள்ளார். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்; தென்னக இரயில்வே துறையின் சார்பில் இரயில் நிலைய அதிகாரிகளுக்கிடையிலான தகவல் தொடர்புகள் குறித்து 12.06.2019 அன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையானது மொழியுரிமை உணர்வாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. 

இரயில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் கட்டுப்பாட்டாளர்கள், நிலைய கண்காணிப்பாளர்கள், மற்றும் நிலைய அலுவலர்கள் ஆகியோர் தங்களுக்கிடையே  பணிகுறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்போது, இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர பிராந்திய மொழிகளில் உரையாடல் செய்யக்கூடாதென ஆணையிடும் அறிக்கைதான் தென்னக இரயில்வேயின் அந்த சுற்றறிக்கையாகும். அதாவது, தமிழில் பேசக் கூடாது என்பதுதான் அதன் நோக்கமாகும். 

இந்தி மட்டுமே பேசத் தெரிந்த சில அதிகாரிகளுக்காகத் தமிழ்ப் பேசும் பெரும்பான்மையினரை இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி எழுத்துபூர்வமான சுற்றறிக்கையாகவே வெளியிட்டு தென்னக இரயில்வே நிர்வாகம் வற்புறுத்தியது. தமிழ் தெரியாதவர்களிடம் தமிழில் பேசினால் அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு செயல்படும் நிலை ஏற்படலாமென்றும் அதனால் விபத்துகள் நேரும் வாய்ப்புகள் உருவாகுமென்றும் நிர்வாகம் அச்சப்படுவதில் தவறில்லை. 

ஆனால், அதற்காகத் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை மெல்ல மெல்ல அப்புறப்படுத்தும் ஆபத்தை வரவேற்க இயலுமா? காலப்போக்கில் இரயில்வே துறையில் இந்தி அல்லது ஆங்கிலம் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்கிற நிலை உருவானால், தமிழர்களும் இந்தி கற்றாகவேண்டும் என்கிற கட்டாயம் உருவாகும். 

எனவே, இத்தகைய சுற்றறிக்கையை நிர்வாகம் தொடர்பானது  என்று மட்டுமே இலகுவாக எடுத்துக்கொள்ள இயலாது. ஒரே மொழியை பேசுவோரிடையிலும் புரிந்துகொள்ளுவதில் குழப்பம் ஏற்படுவதுண்டு.  தகவல் பரிமாற்றம் என்பது ஒருவகை தனித்திறன். இது மொழியோடு மட்டுமே தொடரபுடையதல்ல. எனவே, இதில் நிர்வாகத்துக்கு உள்நோக்கம் இருப்பதை புரிந்துகொள்வது இன்றியமையாததாக உள்ளது. 

இந்நிலையில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்துத் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியதும் நிர்வாகம் பின்வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கும அதே வேளையில், தென்னக இரயில்வே நிர்வாகத்தின் இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் இனிவருங்காகாலத்தில் இத்தகைய முயற்சிகளைக் கைவிடவேண்டும் என்பதுடன்,  பிறமொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் வேலை செய்யும்  இந்தி பேசுவோருக்குப் பிராந்திய மொழிகளைக் கற்றுத்தர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

அதேபோல இந்தி பேசுவோர் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் வேலை செய்யும் பிறமொழி பேசுவோர் இந்தியைக் கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். இந்த அணுகுமுறைகளின்றி இந்தியை மட்டுமே பிறமொழி பேசுவோர் மீது திணிக்கும் முயற்சியை முற்றிலும் கைவிடவேண்டுமென தென்னக இரயில்வே நிர்வாகமும் மைய அரசும் முன்வரவேண்டுமென விடுதலைச்சிறைத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது எனக் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios