பெரியார் சிலை உடைப்பில் பாமகவின் கூடா நட்புதான் காரணம் என்று விசிக தலைவர் தொல்.  திருமாவளவன்  தெரிவித்துள்ளார். 
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். "தலைவர்களின் சிலைகளை உடைப்பதும் அவமதிப்பதும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடக்க அரசின் மெத்தன போக்கே காரணம். பெரியார், அம்பேத்கர் சிலைகளை அவமதிக்கும் சக்திகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து பா.ஜ.க.வுக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் சிலைகளை அவமதிக்கும் நடவடிக்கைகளுக்கு ஊக்கப்படுத்துவதாகவே தெரிகிறது.
பெரியார் சிலை உடைப்பில் பாமக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் பாமக எந்தத் திசையில் பயணிக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பாமக தொண்டர்கள் எந்த வகையில் உறவாடுகிறார்கள் என்ற கேள்விகளும் எழுகின்றன. பெரியார் பெயரில் கொள்கை கோட்பாடுகளை வைத்து இயக்கம் நடத்துவதாகக் கூறும் பாமக, பெரியார் சிலையை உடைக்கும் நிலைக்குப் போயிருக்கிறது. இதற்குக் காரணம் கூடா நட்புதான். இந்த நிலை வேதனை அளிக்கிறது.
பாஜக முஸ்லிம்களை குறி வைத்து காய்களை நகர்த்துகிறது. மற்ற மாநிலங்களில் அது எடுபடுவதைப் போல தமிழகத்தில் எடுபடவில்லை. அதனால் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து கூறுவது, பெரியார் சிலைகளை உடைக்கத் தூண்டுவது போன்ற நடவடிக்கைகளில் சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது. அந்தத் திசையில்தான் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துகளும் அமைந்துள்ளது” என்று திருமாவளவன் தெரிவித்தார்.