திமுக கூட்டணியில் இடம்பெற பாமகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கடும் முயற்சி செய்து வருகின்றன. ஆனால், இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருக்க விரும்பவில்லை என்பதால் இந்த உள்ளே வெளியே விளையாட்டில் யார் பலம் காட்டப் போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில் பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது என தொல்.திருமாவளவன் கறாராக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கூறுகையில், ‘’திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடந்த 2-ம் தேதி சந்தித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடந்த ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் கலந்து கொண்டதற்காக நன்றி தெரிவித்தேன். அப்போது அரசியலை பற்றி பொதுவான வி‌ஷயங்களை ஆலோசித்தோம். இந்த சந்திப்பின் போது தொகுதி ஒதுக்கீடு பற்றி பேசவில்லை. இதுவரை திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 

தர்மபுரி இளவரசன் மரணத்தில் ஸ்டாலின் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதும் பாமக அவதூறு பரப்பினார்கள். எனக்கு மிரட்டல்களும் வந்தன. சமூக வலைதளங்களிலும் அவதூறு பரப்பினார்கள். நாங்கள் இரண்டு வி‌ஷயங்களில் தெளிவாக இருக்கிறோம். பா.ஜனதாவை எதிர்ப்பது மற்றும் பாமக இடம்பெறும் கூட்டணியில் இடம்பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பாமக கூட்டணி தொடர்பாக திமுக மற்றும் அதிமுகவுடன் பேசினாலும் முடிவில் அதிமுகவுடன் கூட்டணியில் இடம் பெறும் என்பதே எனது கருத்து. 

அதிமுக எந்த நெருக்கடியும் இல்லாமல் கூட்டணி அமைத்தால் அதில் கண்டிப்பாக பாஜக இடம்பெறும். ஆனால் பாஜக அரசு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து கூட்டணி வைக்கும். இதனால், திமுக கூட்டணிக்கு நன்மை கிடைக்கும்’’ என அவர் தெரிவித்தார்.