புலம்பெயர் தொழிலாளர்களின் துயர்துடைக்க குடும்பம் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் இதுவரை இந்தியா கண்டிராத பேரவலமாக புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை எழுந்துள்ளது. இருமாத கால முழுஅடைப்பால் பட்டினிகிடக்கும் நிலையில்,போக்குவரத்தும் முடங்கிப்போன சூழலில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் நடந்தே செல்லும் வெங்கொடுமை நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் மெத்தனமான போக்குகளே இதற்கு காரணமாகும். எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிய பின்னரும் போதிய அக்கறை காட்டாதது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தற்போது உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக இப்பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் மெத்தனத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்நாட்டிலும் உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அலட்சியத்தை வெட்கக்கேடு என சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் இத்தகைய மக்கள்விரோத அணுகு முறைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்நிலையில்,வெளிமாநிலங்களில் இருந்து இதுவரை தமிழ்நாட்டுக்குத் திரும்பியிருக்கும்-இன்னும் திரும்பிக்கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் துயர்துடைக்க குடும்பம் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். அத்துடன், தமிழகத்திலுள்ள பிறமாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு விரைந்து அனுப்புவதற்கு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக 31ம்தேதி தமிழ்நாடு முழுவதும் விசிக சார்பில் இணையவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். பிற மாநிலங்களுக்குச் சென்று வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா - என்று பல்வேறு மாநிலங்களில் சென்று வேலை பார்க்கிறார்கள். அவர்களெல்லாம் இந்தப் பேரிடர் காலத்தில் சொல்லவொண்ணா வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 25 விழுக்காட்டினர் கூட இன்னும் தாயகம் திரும்பவில்லை. அவர்களை ஊருக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு அலட்சியம் காட்டிவருகிறது. ஊருக்குத் திரும்பியவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை நிவாரணம் எதையும் அறிவிக்கவில்லை.
மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடைய நிலையே இதுவென்றால், பிறநாடுகளில் அல்லலுறும் தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் பற்றி கேட்கவே வேண்டாம். வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான தமிழ்த் தொழிலாளர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர். அவர்களெல்லாம் எப்போது இங்கே அழைத்து வரப்படுவார்கள் என்பது இதுவரை தெளிவாகவில்லை. பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் சிக்கித் தவிப்பவர்களை விரைந்து சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும். அப்படி அழைத்து வரப்படும் நபர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இணையவழி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்று ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறோம்.” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.