மீனவர்கள், விவசாயத் தொழிலாளர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிவர் புயலால் மக்கள் அஞ்சிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லையென்றாலும் அதையொட்டிப் பெய்த பெருமழையால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு உரிய நிவாரணத்தைத் தமிழக அரசு விரைந்து வழங்கிடவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். நிவர் புயலால் கடலோர மாவட்டங்களில் மரங்கள், மின் கம்பங்கள், தொலைபேசிக் கம்பங்கள் சாய்ந்தும்; விவசாயப் பயிர்கள் சேதமடைந்தும் உள்ளன.
நெற்பயிர், கரும்பு, தோட்டப் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கோழிகள் மற்றும் கால்நடைகளும் பெருமளவில் இறந்துள்ளன. புயலையொட்டிப் பெய்த பெருமழை காரணமாக மீனவர்களும் விவசாயத் தொழிலாளர்களும் வேலைக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர். எனவே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை விரைந்து வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணத்தை அளிப்பதோடு, குடிசை வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் வீடுகளாகக் கட்டித்தர வேண்டும். மீனவர்கள், விவசாயத் தொழிலாளர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதென்றும் அது புயலாக உருவெடுக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே அதற்கான முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கைகளை தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் பரிந்துரைகளின்படித் தமிழக அரசு செய்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்.” என்று அறிக்கையில் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 27, 2020, 8:31 PM IST