பெரியார் இல்லாமல் தமிழகத்தில் அரசியலில் யாரும் ஈடுபட முடியாது. இதை ரஜினி உணர்வார். விரைவில் பெரியார் வாழ்க என ரஜினி சொல்வார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
 பெரியார் குறித்து 'துக்ளக்' விழாவில் நடிகர் ரஜினி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, ‘துக்ளக் விழாவில் தான் இல்லாததது எதையும் நான் பேசவில்லை. எனவே நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

 
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளாகவே பெரியாரை விமர்சிப்பதும் கொச்சைப்படுத்துவது நடந்துவருகிறது. மாமலையிடம் மோதி நிறைய பேர் குப்புற விழுந்திருக்கிறார்கள். அண்ணாவும், கலைஞரும் பெரியாரின் கொள்கைகளுக்கு தேர்தல் அரசியலில் வலு சேர்த்திருக்கிறார்கள்.
சங் பரிவாரின் கருத்துகளுக்கு அடிப்பணிந்து ரஜினி செயல்படுகிறார். அவர் பகடை காயாக மாறி வருகிறார் என்று நினைக்கிறேன். ஒரு வேளை அதுதான் அவரது அடையாளமாக இருந்தாலோ அரசியல் நிலைப்பாடாக இருந்தாலோ அந்தக் கனவு பலிக்காது. பெரியார் இல்லாமல் தமிழகத்தில் அரசியலில் யாரும் ஈடுபட முடியாது. இதை ரஜினி உணர்வார். விரைவில் பெரியார் வாழ்க என ரஜினிகாந்த் சொல்வார்.” என்று திருமாவளவன் தெரிவித்தார்.