அம்பேத்கருக்குப் பிடிக்காத ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

அரியலூர் அண்ணா சிலை அருகே திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பாவை ஆதரித்து பேசிய அவர்,''பிரதமர் வேட்பாளராக மோடி நின்றபோதே, மோடி மோசமானவர் என்றேன். அவர் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டுக்குப் பெரும் தீங்கு ஏற்படும் என்றேன். அவர், குஜராத் முதல்வராக இருந்தபோது, முஸ்லிம்கள் 3,000 பேரை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் கொன்றனர். அதன் பிறகுதான் மோடி தேசிய அளவில் பெரிய தலைவராக அறியப்பட்டார். அதன் பின்தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அவரைத் தேடிக் கண்டறிந்து இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது.

ரு.500, ரூ.1,000 நோட்டுகளைச் செல்லாது என எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அறிவிப்பை வெளியிட்ட ஒரே பிரதமர் இந்திய நாட்டுப் பிரதமர் மோடிதான். கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்து மக்கள் கணக்கில் செலுத்துவேன் என்றார். இதுவரை செலுத்தினாரா?. அண்டப் புளுகர், ஆகாசப் புளுகர் என மோடிக்கு விருது வழங்கலாம்.

அடிப்படைப் பிரச்சினைகளுக்காக என்றாவது பாஜகவினர் போராடி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. எந்நேரமும் போராட்டக் களத்தில் இருப்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அனைத்து சமுதாய மக்களுக்கும் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடும் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை மத்திய அரசு நியமிக்கிறது. இதனைத் தடுக்க அதிமுகவால் முடியுமா? ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு அம்பேத்கர், பெரியார், அண்ணா, திருவள்ளுவர், விவேகானந்தர், காமராஜர் உள்ளிட்டோரைப் பிடிக்காது. நம்மைக் குறி வைத்து, நமக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்.

அண்ணா சிலையைத் தீ வைத்துக் கொளுத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள்தான். பெரியார், அண்ணா மற்றும் திருவள்ளுவர் சிலைகளுக்குக் காவியை பூசுவதுதான் பாஜக. பாஜகவுக்குத் தமிழ் பிடிக்காது. இந்தி, சமஸ்கிருதம் மட்டுமே பாஜகவுக்குப் பிடிக்கும். அம்பேத்கருக்குப் பிடிக்காத ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ். காந்தியடிகளையே சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் இயக்கம். காமராஜர் தங்கியிருந்த வீட்டுக்குத் தீ வைத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர். எனவே, சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையே தடை செய்தார்.

பாஜகவுக்கு தெரிந்த ஒரே அரசியல் 'நீ இந்து', 'நீ முஸ்லிம்', 'நீ கிறிஸ்துவன்' என மதவெறியைத் தூண்டுவது மட்டுமே’’ என அவர் தெரிவித்தார்.