டெல்லியில் இருந்து கொண்டே தென்மாவட்டங்களில் தீப்பிடிக்க வைப்பேன் என திருமாவளன் பேசியதாக அவருக்கு களங்கம் ஏற்படும் வகையில் திட்டமிட்டு அரைகுறையாக கட் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

சிதம்பரம் தொகுதியில் மக்களவை எம்.பி.,யாக வெற்றி பெற்றவர் திருமாவளவன். வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஒரு வீடியோவை அவருக்கு எதிரான கட்சி நிலைப்பாட்டை கொண்ட மீடியாக்கள் பரப்பி வருகின்றன. அந்த வீடியோ, ’’ டெல்லியில் இருந்து கொண்டே தென் மாவட்டங்களில் தீப்பிடிக்க வைக்க முடியும், சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க முடியும், வன்முறையை தூண்ட முடியும் ரயில்கள் ஓடாது, பேருந்துகள் ஓடாது விமானங்கள் ஓடாது. என்னால் இதையெல்லாம் தென் மாவட்டங்களில் நடத்திக் காட்ட முடியும்’’ என பேசியதோடு முடிகிறது.

 

ஆனால் அந்த வீடியோ, 2012ம் ஆண்டு பெருங்குடி, சின்ன உடைப்பு ஆகிய இடங்களில் அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன் சிலைகள் உடைக்கப்பட்டதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியது. ஆனால் முழுமையாக அவர் பேசிய வீடியோவில் அவர் வன்முறையை தூண்டும்  விதமாக பேசவில்லை. தொடர்ந்து பேசியுள்ள அவர்,  ’’திருமாவளவன் ரவுடி அல்ல… திருமாவளவன் புரட்சியாளர் அம்பேத்கரின் வாரிசு. புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளைப் படித்தவன். நாகரீகத்தை உணர்ந்தவன். ஆகவே எதிர்ப்பை எப்படித் தெரிவிக்க வேண்டுமோ அப்படித் தெரிவிப்பவர்கள்தான் விடுதலைச் சிறுத்தைகள்” என பேசியுள்ளார். 

இதன் மூலம் அவர் வன்முறையை தூண்டும் விதமாக பேசவில்லை என்பதை உணர முடிகிறது. அவர் மக்களவைக்கு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை எடிட் செய்து அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பரப்பி வருகிறார்கள்.