thirumavalavan has to be arrest said h raja

மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

அம்பேத்கர் நினைவுநாள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6-ம் தேதியன்று தலித் இஸ்லாமியர் எழுச்சி நாளாக கடைபிடித்து அன்றையை தினத்தில் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன், அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் அதனால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாகவும் சங் பரிவார் அமைப்புகள் கூறுகின்றன. அப்படி பார்த்தால், பெரும்பாலான புத்த விகார்களையும் சமண கோவில்களையும் இடித்துத்தான் இந்து கோவில்கள் கட்டப்பட்டுள்ளன என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி பார்த்தால், இந்து கோவில்களை இடித்துவிட்டு புத்த விகார்கள் கட்ட வேண்டும் என்று கூறமுடியுமா? என பேசியிருந்தார்.

ஆனால், திருமாவளவன் இந்து கோவில்களை இடிக்கவேண்டும் என கூறிவிட்டார் என்றுகூறி பாஜகவினரும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகளும் திருமாவளவனுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துவருகின்றன.

திருமாவளவனின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். திருமாவளவனை மானங்கெட்டவர் என தரகுறைவாக விமர்சித்துள்ளார்.

தனது சமூகம் சார்ந்த பெண்களை தவிர மற்ற பெண்களைத் தரக்குறைவாக பேசியவர் திருமாவளவன். கோவில்களை இடிக்க வேண்டும் என மத நல்லிணக்கத்திற்கு எதிராக திருமாவளவன் பேசியுள்ளார். ஜிகாதிகளின் பின்னால் மறைந்துகொண்டு திருமாவளவன் இதுபோன்று பேசுகிறார். கரூர், மாயவரத்தில் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக நடந்த வன்முறையை மறந்துவிட வேண்டாம் என்கிற தொணியில் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், மத நல்லிணக்கத்திற்கு எதிராக பேசியுள்ள திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.