விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை இழிவுபடுத்தும் காயத்திரி ரகுராமை மனிதநேய மக்கள் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது, இது குறித்து  தெரிவித்துள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பேசிய பேச்சுக்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். 

அவரது அறிக்கையில், விசிக மகளிர் மாநாட்டில் “நான் ஆற்றிய உரையில், ஒருசில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது என சிலர் என்னிடம் கூறினர். அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும், அதற்காக நான் வருந்துகிறேன்” எனக் கூறியிருந்தார். அவரின் பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவித்த நிலையிலும், திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் என்பவர் தொடர்ந்து முனைவர் தொல். திருமாவளவன் பெயருக்கும் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி அவப்பெயரை உண்டாக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். 

காயத்ரி ரகுராமின் இதுபோன்ற நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவராகவும் மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கும் முனைவர் திருமாவளவனை இழிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் காயத்திரி ரகுராம் என்பவரை உடனடியாக வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து கைது செய்ய தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.