கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே இந்து என்றால் தன் உடல் முழுவதும் எரிவதாக எஸ்றா சற்கும் பேசியிருந்தார், தற்போது முருகனும், விநாயகரும் ஒரு அப்பனுக்கு பிறந்தவர்களா என்கிற ரீதியில் திருமா பேசியும் ஸ்டாலின் மவுனம் காக்கிறார்.  

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன் கிருஷ்ணர் தான் ஜாதி மதங்களை உருவாக்கியதாக புராணம் கூறுகிறது என்று பேசியிருந்தார். இதே போன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிகழ்வில் பங்கேற்று இந்து மதம் ஏன் இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் பரவவல்லை, முஸ்லீம்கள் நினைத்திருந்தால் இந்தியா முஸ்லீம் தேசமாக மாறியிருக்கும் என்றும் கூறியிருந்தார். இவற்றுக்கு எல்லாம் உச்சமாக தற்போது ஒரு அப்பனுக்கு பிறந்த முருகனும், விநாயகரும் எப்படி தமிழ் கடவுளாகவும், வட இந்திய கடவுளாகவும் இருக் முடியும் என்று இந்துக்கள் மனதை புண்படும்படி பேசியுள்ளார்.

இவற்றுக்கு எல்லாம் உச்சமாக பெண்கள் குறிப்பிட்ட சில சமூக பெண்கள் அனைவருமே தேவதாசிகள் என்கிற ரீதியில் திருமா பேசியதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் திருமா தொடர்ந்து இவ்வாறு பேசி வருகிறார். அதிலும் கிறிஸ்தவ, முஸ்லீம் தொடர்பான நிகழ்வுகளில் திருமா இப்படி பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள அவர்களின் மேடையில் இந்து மதத்தை கிண்டல் செய்யவும், விமர்சிக்கவும், ஏன் அவதூறு செய்யவும் திருமா தொடர்ந்து இது போல் பேசி வருகிறார்.

திருமாவின் பேச்சுகளை கடந்த சில முறை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இந்து அமைப்புகள் விட்டுவிட்டன. ஆனால் தற்போது தைப்பூசத்திற்கு விடுமுறை விட்டுள்ளதற்கு திருமா எதிர்ப்பு தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழ் கடவுளான முருகப்பெருமான் தோன்றிய தினமாக கருதப்படும் தைப்பூசத்திற்கு மலேசியா, சிங்கப்பூரில் எல்லாம் பொது விடுமுறை உண்டு. ஆனால் தமிழகத்தில் தற்போது தான் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து கடவுள் நம்பிக்கை இல்லாத திருமா இந்த விஷயத்தை பாராட்டவில்லை என்றாலும் அவதூறு செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் முருகனை தமிழ் கடவுளே இல்லை என்கிற ரீதியில் ஒரு வாதத்தை திருமா முன் வைத்திருப்பது முருக பக்தர்களை கொதிக்க வைத்துள்ளது.

இத்தனை நாட்கள் சனாதனத்தை எதிர்க்கிறோம் என்று ராமரை, கிருஷ்ணரை திருமா கடுமையாக விமர்சித்து இழிவுபடுத்தி வந்தார். தற்போது முருகப்பெருமானை நோக்கி அவரது பார்வை திரும்பியுள்ளது. முருகப்பெருமானை தமிழகத்தில் வழிபடாத இந்துக்களின் வீடுகளே இல்லை எனலாம். அறுபடை கோவில்கள் எழுப்பி தமிழர்கள் முருகனை வணங்கி வருகிறார். அப்படி இருக்கையில் அந்த முருகப்பெருமான் ஒரு அப்பனுக்கு பிறந்தவரா? என திருமா எழுப்பியுள்ள கேள்வியால் முருக பக்தர்கள் மனம் ரணமாகிப்போயுள்ளது. தேர்தல் சமயத்தில் திருமா இப்படி இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதற்கு சிறுபான்மையினர் வாக்கு வங்கி தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இந்துக்களை இப்படி நிந்தித்து, மனதை நோகடித்து தான் திருமா அரசியல் செய்ய வேண்டுமா? என்கிற கேள்வியும் எழுகிறது. திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியிருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது சட்டப்பேரவை தேர்தலிலும் கணிசமான தொகுதிகளை திமுக விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கும். ஆனால் அதற்கு முன்பாக இந்து கடவுள்கள் தொடர்பாக குறிப்பாக முருகப்பெருமான் குறித்து திருமா கூறிய கருத்துகளை திமுக ஏற்கிறா என்பதை விளக்க வேண்டும். இது குறித்து எதுவுமே சொல்லாமல் திருமாவை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து தொகுதிகளை திமுக கொடுத்தால் முருகப்பெருமான் குறித்த திருமாவின் கருத்துகளையே திமுகவும் ஏற்கிறது என்று மக்கள் எடுத்துக் கொள்ளலாம்.

முருகப்பெருமானை இழிவுபடுத்திய திருமாவை கண்டிக்க மு.க.ஸ்டாலினுக்கு துணிச்சல் இல்லை என்றால் குறைந்தபட்சம் இது போன்று பேசாதீர்கள் என்றாவது திருமாவிற்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கலாம். இதையும் செய்யவில்லை என்றால் ஸ்டாலினுக்கும் திருமாவுக்கும் இந்து மத துவேசத்தில் எவ்வித வேறுபாடும் இல்லை என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம்.