பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீயின் மரணத்துக்கு காற்றின் மீதுதான் வழக்கு போட வேண்டும் எனக் கருத்து கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்னை பள்ளிக்கரணையில் கடந்த மாதம் பேனரால் விபத்தில் சிக்கி 23 வயதான சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்தச் சம்பவம் தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இது குறித்து டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், “அப்பெண் வண்டியில் செல்லும் போது, காற்று வீசியதால் பேனர் விழுந்தது. பேனர் வைத்தவரா அதனை தள்ளிவிட்டுக் கொன்றார்? இல்லையே. இந்தப் பிரச்சினையில் வழக்கு தொடுக்க வேண்டும் என்றால், காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும்" என தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் பொன்னையனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் அதற்குக் கண்டனம் தெரிவித்தார்கள். இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவனும் பொன்னையனுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சுபஸ்ரீ மரணத்திற்கு காற்று மீது தான் வழக்கு போட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார்.